உடல் எடையைக் குறைக்க செயற்கை இனிப்பூட்டி சாப்பிடாதீர்கள்: உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரைக்குப் பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளான என்எஸ்எஸ் (நான்-சுகர் ஸ்வீட்னர்ஸ்) எனப்படும் அஸ்பார்ட்டேம், நியோடேம், சாக்கரின், ஸ்டீவியா, சுக்ரலோஸ், சைக்ளமேட்ஸ் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை பாக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களிலும், குளிர்பானங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.இவை தனித்தனியாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு உணவுகளில் இந்த செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் கலோரிகள் குறைவாக இருக்கும் என்றும் எடை நிர்வாகத்தில் உதவும் என்று நம்பப்பட்டு வருகிறது.

ஆனால், எடையை நிர்வகிப்பதில் செயற்கை இனிப்பூட்டிகள் நீண்டகால பயன்களை அளிப்பதில்லை. பெரியவர்கள், சிறியவர்கள் என யாருக்கும் நீண்டகால பயன்களை இவை தருவதில்லை என உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், உடல் எடையைக் குறைக்க செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் டபிள்யூஎச்ஓ அறிவுறுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE