முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் சென்றபோது, ‘அல் காதிர் ட்ரஸ்ட்’ வழக்கில், தேசிய ‘அக்கவுண்டபிலிடி பீரோ’ அவரைக் கைது செய்தது. இந்நிலையில், ‘தோஷகானா’ என்ற மற்றொரு வழக்கில், இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசுப் பொருட்களை அரசிடம் சேர்க்காமல் அவற்றை விற்று அந்தப் பணத்தை தானே எடுத்துக் கொண்டார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதில், இம்ரான் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதை கண்டித்து இம்ரான் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
முன் எப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக ராணுவ அலுவலகங்கள், ராணுவத் தளபதிகளின் வீடுகள் தாக்கப்படுகின்றன. பெஷாவர் நகரில் வானொலி நிலையம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. எதிர்வினையாக, பிடிஐ கட்சியின் பொதுச் செயலாளர் அசத் உமர் மற்றும் கட்சித் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்ரான் கைதுக்கு ஆட்சேபம் தெரிவித்து பிடிஐ கட்சி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யச் சொல்லி விட்டது.
‘‘இம்ரான் கைது பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை; 160 மில்லியன் பவுண்ட் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. தீவிரவாதிகள் போலவே இம்ரானும் பல பள்ளிகளை அழித்தார். பொதுப் பேருந்துகளை எரித்தார்’’ என்றெல்லாம் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், புகார்களை அள்ளி வீசுகிறார்.
» ட்விட்டரின் புதிய சிஇஓ லிண்டா யாக்கரினோ - அதிகாரபூர்வமாக அறிவித்தார் எலான் மஸ்க்
» இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் நீதிமன்றம்
இம்ரான் கான் மீது சுமார் 140 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒன்று – ‘அல்காதிர் ட்ரஸ்ட்’ ஊழல் வழக்கு. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜீலம் பகுதியில் தரமான கல்வி வழங்கும் நோக்கத்துடன் ‘அல் காதிர் பல்கலைக்கழக ட்ரஸ்ட்’ உருவாக்கப்பட்டது. இதில், இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி, நெருங்கிய சகாக்கள் சுல்ஃபிகர் புகாரி, பாபர் ஆவன் ஆகியோர் நிறுவனர்களாக உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
இந்த ட்ரஸ்ட், மார்ச் 2019-ல் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் இந்த ட்ரஸ்ட்டுக்கு அந்த நிறுவனம் கணிசமான நிலத்தை ‘தானமாக’ வழங்கியது. பதிலுக்கு அரசின் சலுகைகள் அந்த நிறுவனத்துக்குக் கிட்டின. இதன் விளைவாக பாகிஸ்தான் அரசுக்கு 50 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு.
இதனிடையே, இங்கிலாந்தில் சொத்து விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து சட்டவிரோதப் பணம் கைப்பற்றப்பட்டது; அது அல் காதிர் ட்ரஸ்ட்டுடன் தொடர்புடையது என்று உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவிக்கிறார்.
தன்னைக் கொலை செய்ய ராணுவம் மற்றும் உளவு அமைப்புகள் சதித் திட்டம் தீட்டுவதாக இம்ரான் கான், திடுக்கிடும் புகார் தெரிவிக்கிறார். மேலும் இந்த அதிகார அமைப்புகளில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார். இவற்றில் எதுவுமே பாகிஸ்தான் அரசியலில் புதிது இல்லை. முன்னாள் ஆட்சியாளர்களைக் கைது செய்தலும் தண்டித்தலும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
சுல்ஃபிகர் அலி புட்டோ 1977-ல் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டி சிறையில் தூக்கிலிடப்பட்டார். நாட்டின் 5-வது பிரதமர் ஹுசெய்ன் ஷஹேத் சுரவர்தி, இம்ரானுக்கு முன்பு இருந்த, 15-வது பிரதமர் ஷஹித் காக்கன் அப்பாஸி, பெனாசிர் புட்டோ, முன்னாள் அதிபர் ஜெனரல் முஷாரஃப், நீண்ட நாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப், தற்போது இம்ரான் கான்.. என்று பட்டியல் நீள்கிறது.
பாகிஸ்தானில் ராணுவம், உளவுத் துறை, மதவாத அடிப்படை சக்திகள் ஆகியோருடன் சுயநல அரசியல் கட்சித் தலைவர்கள் என்று பலரும் ஆளாளுக்கு ‘விளையாடுகின்றனர்’. இதனை மறைக்க, ‘இந்திய எதிர்ப்பு’ என்ற ஒற்றை பிரச்சாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, இந்த அதிகார மையங்கள் பாகிஸ்தான் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன.
கடந்த 75 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள், அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளின் தயவில் தனது நாட்டை ‘இரவல் பொருளாதாரம்’ மூலம் வளர்த்துவிட முடியும் என்று தவறாக நம்பினார்கள். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதற்கும் ஆபத்து வந்து விட்டது. மாறியுள்ள தற்போதைய சூழலில், வல்லரசுகள் முதலில் தங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டன. இதனால், வேண்டிய அளவுக்கு ‘வெளி உதவி’ கிடைக்காமல் பாகிஸ்தான் திணறிப் போனது.
கடந்த சில மாதங்களில் வேகமான வீழ்ச்சியை சந்தித்து வருகிற அந்த நாட்டுப் பொருளாதாரம், உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் உதவினால் மட்டுமே, ‘திவால்’ நிலையில் இருந்து மீள முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பின், ‘ஓரளவு’ நிதியுதவி செய்வதாக சர்வதேச நிதியம் அறிவித்தது. கடன் கிடைத்துவிட்ட செய்தியை பாகிஸ்தானியர்கள் தெருவுக்கு வந்து உற்சாக நடனம் ஆடி வரவேற்றார்கள்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சாமானியர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். ஆனால் அதிகார ஆசை பிடித்த ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் பொதுமக்களைத் தூண்டிவிட்டுக் கலவரத் தீயில் குளிர் காய்கின்றனர். தன்னைத் தாக்க வரும் ‘பவுன்சர்களில்’ இருந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எவ்வாறு தன்னைக் காத்துக் கொள்ளப் போகிறார் என்று உலகம் திகிலுடன் வேடிக்கை பார்க்கிறது.
இதுவரை எந்த நாட்டு அரசும் இதுகுறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை. ஒன்று மட்டும் ஐயத்துக்கு இடமின்றி தெளிவாகத் தெரிகிறது. ஆரோக்கியமான ஜனநாயக ஆட்சி முறைக்கு பாகிஸ்தான் இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்கத்தான் வேண்டும். இதற்கு அந்த நாடு, இந்தியா உட்பட யாரையும் குறை சொல்ல முடியாது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago