சிறையில் தண்டனை முடிந்த 198 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

By செய்திப்பிரிவு

கராச்சி: பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறது. பாகிஸ்தான் சிறைகளில் தற்போது 654 இந்திய மீனவர்கள் இருப்பதாகவும் இவர்களில் 631 பேர் தண்டனைக் காலத்தை முடித்துவிட்டு விடுதலைக்காக காத்திருப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில் கராச்சி நகரின் மாலிர் சிறையிலிருந்து 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை மாலை விடுதலை செய்தனர். இந்த மீனவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாலிர் சிறை கண்காணிப்பாளர் நசீர் துனியோ கூறும்போது, “மாலிர் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்களை விடுதலை செய்யவிருந்தோம். ஆனால் 2 மீனவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். எனவே 198 மீனவர்களை விடுதலை செய்துள்ளோம். மேலும் 300 இந்திய மீனவர்களை விடுதலை செய்யவுள்ளோம்” என்றார்.

இந்திய மீனவர்களை வாகா எல்லையில் ஒப்படைப்பதற்காக அவர்களை கராச்சியில் இருந்து லாகூருக்கு ரயிலில் அழைத்து வரும் ஏற்பாடுகளை எதி அறக்கட்டளை செய்திருந்தது.

பாகிஸ்தான் மீனவர் மன்ற பொதுச் செயலாளர் சயீத் பலோச் கூறும்போது, 200 இந்திய மீனவர்கள் ஜூன் 2-ம் தேதியும், மேலும் 100 பேர் கொண்ட குழு ஜூலை 3-ம் தேதியும் விடுவிக்கப்படுவார்கள்” என்றார்.

இந்திய சிறைகளில் பாகிஸ்தான் மீனவர்கள் சுமார் 200 பேர் இருப்பதாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்புவதாகவும் பாகிஸ்தான் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE