பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது: இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

By செய்திப்பிரிவு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கைது செய்யப்பட்டார். இஸ்லமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை ரேஞ்சர்கள் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. கருப்பு நிற ஜீப்பில் அதிரடிப் படை போலீஸாரால் இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இம்ரான் கான் இஸ்லமாபாத் நீதிமன்றத்தில் தனது ஜாமீனை புதுப்பிக்க வந்தார். அப்போது அவரது காரை சூழ்ந்த ரேஞ்சர்கள் அவரை கைது செய்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் 100-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. இதில் 'காதிர் ட்ரஸ்ட்' வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இம்ரான் கான் கைது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசார் மாஷ்வானி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இம்ரான் கானின் கைதை எதிர்த்து அவரது கட்சியான தெஹ்ரீக்-இ- இன்சாப் நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே இம்ரான் கான் பாகிஸ்தானின் ராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். தன்னை மேஜர் பைசல் கொலை செய்ய நினைத்தார் என்று அவர் கூறினார். ஆனால் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இம்ரான் கான் குற்றம் சுமத்துகிறார் என்று பாகிஸ்தான் ராணுவமும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இம்ரான் கான் கைதை தொடர்ந்து இஸ்லமாபாத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் (70) கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவி விலகினார். அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து, முக்கியக் கட்சி பிரிந்து, எதிர்க்கட்சியுடன் இணைந்ததால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்பே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு எதிராக இம்ரான் தொடர்ந்து பேரணிகளையும், போராட்டங்களையும் நடத்தி வந்தார். கடந்த நவம்பர் மாதம் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் பிரச்சாரத்தின்போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போதே அவர் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இம்ரான் கான் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் அவரை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இம்ரான் கானுக்கு அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE