காலிஸ்தான் தலைவர் பரம்ஜித் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

லாகூர்: காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வார் என்கிற மாலிக் சர்தார் சிங், பாகிஸ்தானின் லாகூரில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

காலிஸ்தான் கமாண்டோ படை கடந்த 1986-ல் உருவாக்கப்பட்டது. சீக்கியர்களுக்காக காலிஸ்தான் என்கிற சுதந்திர நாட்டை ஆயுதப் போராட்டம் மூலம் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதன் தலைவர் லாப் சிங், இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பிறகு 1990-களில் அதன் தலைமை பொறுப்பை பரம்ஜித் பஞ்ச்வார் ஏற்றார். பிறகு பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றார்.

இந்தியாவால் தேடப்படும் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவரான இவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்தது. எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மூலம் நிதி திரட்டி, காலிஸ்தான் கமாண்டோ படையை பஞ்ச்வார் உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

இந்நிலையில், பஞ்ச்வார் நேற்று காலை லாகூரில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதில் பஞ்ச்வார் உயிரிழந்தார். காயமடைந்த அவரது பாதுகாவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE