பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட வேண்டும் - எஸ்சிஓ மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கோவா: பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எஸ்சிஓ மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெற்றது. இதில், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர். மாநாட்டிற்கு தலைமை வகித்து ஜெய்சங்கர் ஆற்றிய உரை விவரம்: "பயங்கரவாதத்தின் மீதான பார்வையை விலக்கிக்கொண்டால் அது எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் நலன்களுக்கு தீங்கு விளைவித்துவிடும். கரோனாவுக்கு எதிராகவும், அதன் தொடர் விளைவுகளுக்கு எதிராகவும் உலகம் போராடிக்கொண்டிருந்தபோது, பயங்கரவாதம் தடையின்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்பதில் இந்தியா உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு நிதி செல்லும் பாதையை முடக்க வேண்டும். எந்த ஒரு தனி நபரோ அல்லது நாடோ அரசுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை நாம் அனுமதிக்க முடியாது. அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவது எஸ்சிஓ-வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இணைப்பு என்பது முன்னேற்றத்திற்கு முக்கியம். அதேவேளையில், அது அனைத்து உறுப்பு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும்.

ஆப்கன் மக்களின் நலனை நோக்கியதாக நமது முயற்சிகள் இருக்க வேண்டும். அவர்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகளை அளிப்பது, உண்மையில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை உறுதிப்படுத்துவது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது, போதைப்பொருள் கடத்தலை எதிர்ப்பது, பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை நமது முன்னுரிமைகளாக இருக்க வேண்டும்" என்று ஜெய்சங்கர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE