சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில் தமிழருக்கு சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி நேற்று தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சா கடத்தப்படுவதற்கு உதவியதாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தங்கராஜு சுப்பையா (46) கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்கராஜு குற்றவாளி என கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் அவருக்கு மரண தண்டனை வழங்கியது. இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கிலும் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கராஜுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சிங்கப்பூரில் உள்ள ஐ.நா. மனித உரிமை அலுவலகம் வலியுறுத்தியது. இதுபோல பிரிட்டன் தொழிலதிபரும் மனித உரிமை ஆர்வலருமான ரிச்சர்டு பிரான்சன், தனது வலைப்பூவில், “தங்கராஜு கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து கஞ்சா பிடிபடவில்லை. அப்பாவியான அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது” என வலியுறுத்தினார். ஆனால் சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை மீறி தங்கராஜு நேற்று தூக்கிலிடப்பட்டார்.

இதுகுறித்து சிங்கப்பூர் சிறைத் துறை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறும்போது, “சாங்கி சிறை வளாகத்தில் தங்கராஜுவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது” என தெரிவித்தார்.

இதுகுறித்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “தங்கராஜு மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் கஞ்சா கடத்தலை செல்போன் மூலம் ஒருங்கிணைத்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE