பிரதமர் மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: ஆஸி.யில் பாகிஸ்தானியர்கள் புகழாரம்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: பிரதமர் நரேந்திர மோடி இருந்தால் எதுவும் சாத்தியம் என்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்னில் அமைந்துள்ள புன்ஜில் அரண்மனையில் உலக நல்லெண்ணம் தொடர்பான நிகழ்ச்சிக்கு டெல்லி என்ஐடி அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த டாக்டர் தாரிக் பட் (அகமதியா முஸ்லிம் கம்யூனிட்டி) கூறியதாவது. அனைத்து சமூகங்களையும் மதிக்கும் திறன் படைத்தவராக இந்தியப் பிரதமர் மோடி இருக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் எனக்கு நண்பர்களாக உள்ளனர். அவர்கள் இங்கே ஒருங்கிணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளில் நாங்களும் இங்கே அங்கம் வகித்து வருகிறோம். இந்திய முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கும் இடையே இப்போது அதிக தொடர்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். வேறுபாடுகளை விட பொதுவானவற்றைக் கொண்டுவர விரும்புகிறோம். பிரதமர் மோடி இருந்தால் எதுவும் சாத்தியம்.

தற்போது நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து அவர்களை ஒரே மேடையில் கொண்டு வருவதற்கான ஒரு சிறந்த முன்முயற்சியாக அமைந்துள்ளது. நல்லிணக்கம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக சமூகங்களை ஊக்குவிப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சரியானதைச் செய்து வருகிறார்.

மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பிரதமர் மோடியைப் பின்பற்றும் கவர்ச்சியை அவர் கொண்டுள்ளார். இவ்வாறு டாக்டர் தாரிக் பட் கூறினார். இதேபோல் பாகிஸ்தானியர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE