உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 278 பேருடன் முதல் கப்பல் இந்தியா புறப்பட்டது

By செய்திப்பிரிவு

கார்ட்டூம்: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களுடன் முதல் கப்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்தினருக்கும் கடந்த 15-ம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் இரு தரப்பும் அதற்கு கட்டுப்படவில்லை. தலைநகர் கார்ட்டூம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த சண்டையால் இதுவரை 427 பேர் உயிரிழந்ததாகவும், 3,700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. அமைப்புகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைகளில் பிணவறைகள் நிரம்பி வழிவதாகவும், தெருக்களில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதாகவும் மருத்துவர் சங்கத் தலைவர் அத்தியா அப்துல்லா தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், உணவு, மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாத், தெற்கு சூடான், எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

சூடானில் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களை சாலை, விமானம் மற்றும் கடல்மார்க்கமாக பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், கடந்த 4 நாட்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் சூடானில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐ.நா. படையை சேர்ந்த 700 பேரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

72 மணிநேர போர் நிறுத்தம்: இந்நிலையில் சூடானில் சண்டையிடும் ராணுவத் தளபதிகள் இருவரும் 72 மணிநேர போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “கடந்த 48 மணி நேர தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு, சூடான் ஆயுதப் படைகளும் (எஸ்ஏஎஃப்), துணை ராணுவப் படையும் (ஆர்எஸ்எஃப்) நாடு முழுவதும் 24-ம் தேதி நள்ளிரவு முதல் 72 மணி நேர போர் நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டன” என்றார். போர் நிறுத்தம் அமலுக்கு வரும் 2 மணி நேரத்துக்கு முன்பு இந்த அறிவிப்பை பிளிங்கன் வெளியிட்டார்.

சூடானில் சுமார் 3,000 இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வரும் முயற்சியில் வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு ‘ஆபரேஷன் காவேரி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி ‘ஐஎன்எஸ் சுமேதா’ கப்பலை போர்ட் சூடான் நகருக்கு இந்தியா அனுப்பியது. மேலும் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 விமானங்களை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் குழு, ஆபரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் அங்கிருந்து வெளியேறியுள்ளது. ஐஎன்எஸ் சுமேதாகப்பல், 278 பேருடன் சூடான் துறைமுகத்தில் இருந்து ஜெட்டா நோக்கி புறப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சவுதியில் இருந்து விமானத்தில்..: சூடானில் இருந்து பத்திரமாக வெளியேற ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பலரும் தேசியக் கொடியை ஏந்தியுள்ளனர்.

இந்தியர்கள் 278 பேரும் சவுதிஅரேபியாவின் ஜெட்டா நகரை அடைந்தவுடன், அங்கிருந்து விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்