இந்த ஆண்டு 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா: அமெரிக்க அமைச்சர் டொனால்டு லூ தகவல்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்தியர்களுக்கு இந்தாண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட எச்-1பி மற்றும் எல் விசாக்கள் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டொனால்டு லூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து டொனால்டு லூ அளித்த பேட்டி.

இந்தியர்களுக்கு இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை வழங்க உள்ளோம். மாணவர்கள் விசா மற்றும் குடியேற்ற விசாக்களுடன் இது சாதனை அளவாக இருக்கும். அமெரிக்காவுக்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்திய மாணவர்களுக்கான அனைத்து விசாக்களையும் வழங்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. பி1 (வர்த்தகம்) மற்றும் பி2 (சுற்றுலா) விசா பிரிவுகளில் முதல்முறை விண்ணப்பிப்பவர்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்கு எச்-1பி, எல் விசாக்கள் வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்த விசாக்களை பெறுவதற்கான காத்திருப்பு காலம் தற்போது 60 நாட்களுக்கு குறைவாக உள்ளது. பணியாளர்களுக்கான விசா வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறாம்.

இது அமெரிக்க மற்றும் இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானது. தற்காலிக பணியாளர்கள் அமெரிக்காவில் விசாக்களை புதுப்பிதற்கான பணிகளை நாங்கள் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அவர்கள் விசாக்களை புதுப்பிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டியது குறையும். இவ்வாறு டொனால்டு லூ தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE