சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தம்: ஐ.நா. அழைப்பை ஏற்றது ராணுவம், துணை ராணுவம்

By செய்திப்பிரிவு

கார்த்தும்: சூடானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் 72 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். மக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாகவும், விரும்புவோர் வேறு இடங்களுக்கு பெயரத் தோதாகவும் 72 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூடான் ராணுவமும், துணை ராணுவப்படையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சூடான் கலவரம் தொடர்பாக ஆப்பிரிக்க யூனியன், அரபு லீக் மற்றும் பிற அமைப்புகளுடன் ஆலோசித்துள்ளேன். அனைவருமே சூடான் உள்நாட்டுப் போரை வன்மையாகக் கண்டித்தனர். இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அனைவருமே வலியுறுத்தினர்.

உடனடி நடவடிக்கையாக, சூடானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பும் 72 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். மக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாகவும், விரும்புவோர் வேறு இடங்களுக்கு பெயரத் தோதாகவும் 72 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்" என்றார்.

இந்நிலையில் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு புர்ஹான் அளித்தப் பேட்டியில், "நாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களை எதிர்த்துக் களத்தில் உள்ள ஆர்எஸ்எஃப் படையினர் மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்ய மறுக்கின்றனர். மேலும், இந்த சர்ச்சை தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க யாரும் ஆதரவளிக்கவில்லை. அதனாலேயே வேறு வழியின்றி ராணுவத்தைப் பயன்படுத்துகிறோம்" என்றார்.

ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படை தலைவர் முகமது ஹம்தான் டகாலோ அதே நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், " நாங்கள் மூன்று நாட்கள் அமைதியைக் கடைபிடிக்கத் தயாராக இருக்கிறோம். வெள்ளி அல்லது சனிக்கிழமை கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

300க்கும் மேற்பட்டோர் பலி: சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டி ராணுவத் தளபதி அப்தல் ஃபதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எஃப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அங்கு இதுவரை 330க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கப் பயணத்தின் ஒருபகுதியாக நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்குச் சென்றார். அங்கு அவர் ஐ.நா. தலைவர் அண்டோனியோ குத்ரேஸை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சூடான் கலவரம், ஜி20 மாநாடு மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசித்தேன். சூடான் பிரச்சினை மீது முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சூடானில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தேன். சூடான் விவகாரத்தில் ஐ.நா. மற்றும் பிற உறுப்பு நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE