கார்த்தும்: சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் அபுதாபி போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக, சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள் தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையே ட்விட்டரில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது. இந்நிலையில், சூடானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக வட்டாரம் கூறும்போது, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்களுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். அவர்கள் ஒத்துழைப்பை நல்கியுள்ளனர். அதேபோல் பிரிட்டன் துணை தூதர், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரும் அந்தந்த நாட்டு வெளியுறவு அமைச்சகத்துடன் சூடான் சர்ச்சை குறித்து தொடர்பில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், சூடான் நிலைமை குறித்து சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் எச்.எச்.பைசல்பின் ஃபர்ஹானிடம் பேசியதாக கூறியுள்ளார்.
» மக்கள் தொகையில் இந்தியா இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும்: ஐ.நா
» அமெரிக்கா தலையீடு: சூடானில் 24 மணி நேர அமைதிக்கு துணை ராணுவப் படை அழைப்பு
மேலும், கார்த்தூமில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்திய சமூகத்தின் நிலை குறித்த வழக்கமான அறிக்கைகளைப் பெற்று வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் வார்த்தைப் போர்: முன்னதாக, சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்காக மத்திய அரசு 1800119797 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்தது. சூடானில் வெவ்வேறு இடங்களிலும் 1500 பேர் இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த 31 பேர் சூடானில் சிக்கியுள்ளது குறித்து சித்தராமையா கவலை தெரிவித்திருந்தார். கர்நாடகாவின் ஹக்கி பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 31 சூடானில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு பதிலுரைத்திருந்த ஜெய்சங்கர், ”சூடானில் உயிர்கள் ஆபத்தில் உள்ளன. இப்போது அரசியல் செய்யாதீர்கள்” என்று பதிலடி கொடுத்திருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ”ஒரு முன்னாள் முதல்வரின் பொறுப்பான கவலைக்கு வெளியுறவு அமைச்சர் அளித்துள்ள பதில் அதிர்ச்சியளிக்கிறது. இந்த நபர் அதிகாரியாக இருந்தபோது எனக்குத் தெரியும். இப்போது அவர் யாருக்கோ முழு விசுவாசியாகிவிட்டார். தன் விசுவாசத்தை நிரூபிக்க ஏதேதோ செய்கிறார்” என்று ட்வீட் செய்திருந்தார்.
270 பேர் பலி: சூடான் கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. அங்கே ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலில் கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூடானில் ஏன் இத்தனை மோதல்? - 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சூடான் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. 1956-ல் சூடான் விடுதலை பெற்றது. அந்தச் சுதந்திரதுக்கு முன்னதாகவே தெற்கு சூடான், வடக்கு சூடான் என்ற சர்ச்சை நிலவிவந்தது. 1958, 1969 ஆகிய ஆண்டுகளில் அங்கே பெருமளவில் உள்நாட்டுக் கிளர்ச்சி நடந்தது. 1972-ல் அடிஸ் அபாபா ஒப்பந்தத்தின்படி தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
பின்னர் 1983-ல் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது. காரணம், ஆட்சியைக் கைப்பற்றியிருந்த ராணுவம் முஸ்லிம் ஷாரியா சட்டத்தை திணிக்க முயன்றது. கிறிஸ்துவர்களும், அனிமிஸ்ட்ஸ் என்ற மதத்தவரும் அதிகம் இருந்த தெற்கு சூடானில் இந்தத் திணிப்பு கிளிர்ச்சியாக வெடித்தது. பின்னர் 1989-ல் ஆளுங்கட்சியும் தெற்கின் எதிர்ப்புக் குழுக்களுக்கும் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தின.
அப்போது அரசியல் ரீதியாகவும், மதம் சார்ந்தும், ராணுவம் ரீதியாகவும் பலம் பொருந்தியவராக இருந்த ஒமர் அல் பஷீர் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி ராணுவத் தளபதியாகவும், பிரதமராகவும் பிரகடனம் செய்து கொண்டார். ஆனால், 1996-க்குப் பின்னர் அல் பஷீர் தொடர்ந்து தன்னை அதிபராக நிலைநிறுத்திக் கொண்டார். 1996-க்குப் பின்னர் அங்கு தேர்தலே நடைபெறவில்லை.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு அந்த நாட்டின் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இதன்பின் புதிய அரசை அமைப்பதற்கான ஜனநாயக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ராணுவம் நாட்டைக் கைப்பற்றியது. இதனால், சூடான் ராணுவத்துக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2003-ல் பூதாகரமாக வெடித்த கலவரங்களுக்குப் பின்னர் சூடானில் இதுவரை 40 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 20 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன அழிப்புச் சம்பவங்கள் இன்றுவரை நடந்தேறி வருகிறது. அங்கே எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச பேரும் பசி, பட்டினி, சுத்தமான குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
சூடானில் விவசாய நிலம் நிறைய இருந்தாலும் கூட அங்கே தங்கச் சுரங்கங்களும், எண்ணெய் வளம் நிறைந்த பகுதிகளும் நிறைய இருக்கின்றன. சூடானில் பருத்தி, நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. சூடானின் ஏற்றுமதி வருவாயில் 73 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கின்றது. எல்லா வளமும் இருந்தும் சூடான் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது. காரணம், அங்கே நிலையான ஆட்சி இல்லை. ஜனநாயக அரசு இல்லை. சிறு குழுக்களும், கிளிர்ச்சியாளர்களும், ராணுவமும்தான் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
விவசாயம், வர்த்தகம், எண்ணெய் வளம் எல்லாமே ராணுவம் தனது அதிகாரத்தை குவித்துவைத்துக் கொள்வதற்கான ஆதாரமாக சுருட்டிக் கொள்ளப்படுகிறது. பசியும் பட்டினியும் நோயும் வறட்சியும் மட்டுமே மக்களுக்கு கிடைக்கிறது. சூடானுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் இன்றளவும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago