தொடரும் பதற்றம்: தைவானை சுற்றி 2வது நாளாக சீனா போர் ஒத்திகை

By செய்திப்பிரிவு

தைபே: தைவானை சுற்றி இரண்டாவது நாளாக சீனா ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் எதிர்ப்பை மீறியும் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன ராணுவம் சனிக்கிழமையன்று தைவானைச் சுற்றிப் பயிற்சிகளை அறிவித்தது. இதனால் இரு நாட்டு எல்லையுல் பதற்றம் நீடித்து வருகின்றது.

சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தைவான் அருகே சீனாவின் 71 பிஎல்ஏ விமானங்களையும் ஒன்பது போர்க்கப்பல்களையும் கண்டறிந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக தைவானை சுற்றி ராணுவ பயிற்சிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் ராணுவ பயிற்சி குறித்து தைவானை சேர்ந்த டொனால்ட் ஹோ கூறும்போது, “ சீனாவின் செயல் கவலையை ஏற்படுத்தியுள்ளது, நான் கவலைப்படவில்லை என்று கூறினால் பொய் சொல்கிறேன் என்று பொருள். போர் ஏற்பட்டால் இரு நாடுகளும் பாதிப்படையும்” என்றார். சீனா தொடர்ந்து தைவானை சுற்றியுள்ள முக்கிய இலக்குகளை சுற்றி வளைத்துள்ளதாகவும் திங்கட்கிழமைவரை இப்பயிற்சியில் சீனா ஈடுபடவுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் சென்றதைத் எதிர்த்து சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. இந்த நிலையில் மீண்டும் போர் பதற்ற நிலையை தைவான் எல்லையில் சீனா உண்டாக்கியுள்ளது.

பின்னணி: சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE