அமெரிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறாருக்கு பாலியல் துன்புறுத்தல்: 156 பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக 156 பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில் 233 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இது பால்டிமோர் கத்தோலிக்க சபையின் தலைமை தேவாலயம் ஆகும். இந்த தலைமை தேவாலயம் மற்றும் இதன் கீழ் செயல்படும் தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் எழுந்து வந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக மேரிலேண்ட் அட்டர்னி ஜெனரல் (அரசு வழக்கறிஞர்) கடந்த 2018-ம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அட்டர்னி ஜெனரல் அந்தோணி பிரவுண் அண்மையில் 463 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை வெளியிட்டார். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையின் சுருக்கம் வருமாறு:

அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க திருச்சபை, பால்டிமோர் திருச்சபை ஆகும். இதன் கீழ் 153 தேவாலயங்கள், 59 பள்ளிகள், 24 பாதிரியார் பயிற்சி பள்ளிகள், 26 கன்னியாஸ்திரி பயிற்சி பள்ளிகள் செயல்படுகின்றன.

கடந்த 1940-ம் ஆண்டு முதல் பால்டிமோர் தலைமை தேவாலயம் மற்றும் அதன் கீழ் செயல்படும் தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். அரசு தரப்பு விசாரணையின்படி 156 பாதிரியார்கள், சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் திருச்சபை நிர்வாகம் அனைத்து தவறுகளையும் மூடி மறைத்துள்ளது. மதரீதியான ஆலோசனைக்கு வந்த சிறுவர், சிறுமிகளையும் பாதிரியார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த சிறுவர், சிறுமிகளை, பாதிரியார்கள் மிரட்டி உள்ளனர். சிலரின் பெற்றோரையும் மிரட்டி உள்ளனர். கத்தோலிக்க திருச்சபை நிர்வாகம் சம்பந்தப்பட்ட பாதிரியார்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எங்களது விசாரணையின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட 156 பாதிரியார்களை கண்டுபிடித்துள்ளோம். ஆனால் தவறிழைத்த பாதிரியார்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகமாக இருக்கக்கூடும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தெரசா என்பவர் கூறியதாவது: கடந்த 1970-ம் ஆண்டில் நான் சிறுமியாக இருந்தபோது பாதிரியார் ஜோசப் என்னிடம் பலமுறை அத்துமீறி நடந்து கொண்டார். இதுதொடர்பாக எனது பெற்றோர் மூலம் கிறிஸ்தவ சபையில் புகார் அளித்தேன். ஆனால் அந்த பாதிரியார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாதிரியார் ஜோசப் உயிரிழந்த பிறகு அவரது பாலியல் அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. இதை அடிப்படையாக கொண்டு 2017-ம் ஆண்டு நெட்பிளிக்ஸில் "தி கீப்பர்ஸ்" என்று தொடர் ஒளிபரப்பானது.

பாதிரியார் ஜோசப் உட்பட 156 பாதிரியார்கள் குற்றவாளிகள் என்று அட்டர்னி ஜெனரல் அறிவித்துள்ளார். இதில் தற்போது உயிரோடு உள்ள பாதிரியார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரசா தெரிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். தற்போது சிலர் மட்டுமே உயிரோடு உள்ளனர். அவர்கள் நீதிக்கு முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று பால்டிமோர் நீதிபதி டெய்லர் உறுதி அளித்துள்ளார்.

தவறிழைத்த பாதிரியார்கள் உயிரிழந்துவிட்டாலும் பாதிக்கப்பட்டோர் துணிச்சலாக புகார் அளிக்கலாம். அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று அட்டர்னி ஜெனரல் அந்தோணி பிரவுண் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “பால்டிமோர் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் மட்டுமன்றி ஏராளமான கிறிஸ்தவ சபைகளை சேர்ந்த பாதிரியார்கள் சிறுவர், சிறுமிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். கடந்த 1950 முதல் 2018 -ம் ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்களின்படி சுமார் 7,002 பாதிரியார்களை குற்றவாளிகளாக கண்டறிந்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மட்டுமன்றி போர்ச்சுகல், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்