தைவான் அருகே சீனா போர் ஒத்திகை: இருநாட்டு எல்லையில் பதற்றம்

By செய்திப்பிரிவு

தைபே: சீனாவின் எதிர்ப்பை மீறியும் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததும் சீனாவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இந்த சந்திப்பால் கோபமடைந்த சீனா, எல்லையில் போர் ஒத்திகைகளை நடத்திவருகிறது. இதனால் மீண்டும் சீனா தைவான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

மேலும், தைவானுடன் வேறு எந்த நாடும் அதிகாரபூர்வ உறவு வைத்துக்கொண்டால் அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவானை தனி நாடாக செயல்பட விடவேண்டும் என அமெரிக்கா கூறிவருகிறது.

இந்நிலையில், தனது எதிர்ப்பை மீறியும் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததால் அதிருப்தியடைந்த சீனா, போர் ஒத்திகைகளை நடத்திவருகிறது. இரு நாட்டு எல்லையை ஒட்டிய கடல்பரப்பில் போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கே சீனா போர் ஒத்திகையையும் நடத்தி வருகிறது.

தைவான் அதிபர் சாய் இங் வென் தனது பயணம் குறித்து கூறுகையில், "எந்தவித அழுத்தத்தையும், அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதை இந்த உலகிற்கு காட்டியுள்ளோம். நாங்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியப்போவதில்லை. சர்வதேச சமூகத்துடன் தொடர்பு கொள்வதை நிறுத்தப்போவதில்லை. எதுவும் எங்களைத் தடுக்க முடியாது" என்றார்.

பீஜிங் கண்டனம்: இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை யாராலும் சீனாவிடமிருந்து பிரிக்க முடியாது. சீனாவின் இறையாண்மை, பிராந்திய உரிமை எப்போதும் துண்டாடப்பட முடியாத ஒன்று. தைவானின் எதிர்காலம் அதன் தாய் மண்ணுடன் இணைவதில்தான் இருக்கிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE