உக்ரைன் போர் திட்டங்களுக்கு உதவிய ஆவணங்கள் வெளியே கசிந்ததால் சர்ச்சை...!

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: உக்ரைன் போர் திட்டங்களுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் உதவிய ரகசிய ஆவணங்கள் வெளியே கசிந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு உக்ரைனை தயார்படுத்த உதவும் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் திட்டங்களை விவரிக்கும் ரகசிய ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இது தொடர்பான செய்தியை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறும்போது, “உக்ரைனுக்கு வழங்கிய ரகசிய ஆவணங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதை அறிந்துள்ளோம். இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

ரகசிய ஆவணங்களில் போருக்கான விளக்கப் படங்கள், ஆயுதங்கள் விநியோகம், ராணுவத்தின் தற்போதைய நிலைமை மற்றும் பிற முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆவணங்களில் 12 உக்ரைன் போர்ப் படைப்பிரிவுகளின் பயிற்சி அட்டவணைகளும் அடங்கும், அவர்களில் பலர் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளால் பயிற்சி பெற்றவர்கள் என்ற தகவலும் இடம்பெற்றுள்ளது. மேலும் டாங்கிகளின் விவரம், கனகர ஆயுதங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது பகிரப்பட்டு வரும் தகவல்கள் ஐந்து வாரங்களுக்கு பழமையானவை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் வெளியே கசிந்த ஆவணங்களை ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பும், அமெரிக்காவும் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE