24 மணி நேரமும் கேஸ் விநியோகிக்க முடியாது | கடும் பொருளாதார நெருக்கடி; கைவிரித்த பாகிஸ்தான் அமைச்சர்

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளதால் 24 மணி நேரமும் தடையின்றி கேஸ் விநியோகம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் இனி பணக்காரர்கள் கேஸ் விந்யோகத்திற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் முஸ்டாக் மாலிக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ளதால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. இதனால், உணவு, மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது. இதனால், அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. பால், காய்கறி, சமையல் எரிவாயு, பெட்ரோல் விலை உச்சம் தொட்டுள்ளது. மக்கள் உணவு வாங்கபணம் இல்லாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடும் நிலவுகிறது. அதனால் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு அளவு அவ்வப்போது குறைந்துவிடுகிறது. இதனால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் பெட்ரோலியத் துறை அமைச்சர் முஸ்டாக் மாலிக் இது குறித்து கூறுகையில், "எரிவாயு கையிருப்பு குறைந்து வருகிறது. அதனால் 24 மணி நேரமும் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியாது. மேலும் இனி பணம் படைத்தவர்கள் சமையல் எரிவாயுவுக்கு கூடுதலாக செலவழிக்க வேண்டும். அதனால் கேஸ் விநியோகம் பணக்காரர்களுக்கு ஒரு விலையிலும், ஏழைகளுக்கு சலுகை விலையிலும் வழங்கப்படும். அதேபோல் இது நோன்பு காலம் என்பதால் அதிகாலை ஷெஹர் மற்றும் மாலை நோன்பு துறக்கும் இஃப்தார் வேளையில் கேஸ் விநியோகம் தங்குதடையின்றி வழங்கப்படும்" என்றார்.

ஆனால் அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கராச்சி வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கராச்சி தொழில்துறையினர் நாட்டின் வருவாயில் 68% பங்களிப்பு தருகின்றனர். அப்படியிருக்க கேஸ் விநியோகத்தை சீராக வழங்க மறுப்பது நியாயமற்றது. கேஸ் விநியோகம் தடைபட்டால் பல தொழிற்சாலைகள் இயங்கவே முடியாது என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE