அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு (44) பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.

லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார். கைதுக்கு பின்னான நடவடிக்கைகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. அவர் சரணடைவார் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், அதன்படி லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வந்த டொனால்ட் ட்ரம்ப் அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார்.

வழக்கின் பின்னணி: டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது.

இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்டரீதியிலான செலவு என்று பதிவு செய்யப்பட்டது என்பது தான் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு. அமெரிக்காவில் பொய்யான வணிக செலவை காட்டுவது சட்டவிரோதம் ஆகும்.

இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஸ்டோர்மிக்கு பணம் தரப்பட்டதை கடந்த 2018 ஜனவரியில் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரையாக வெளியிட்டது. இதுவே ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக அமைந்தது.

ட்ரம்ப் மீதான வழக்கின் முக்கிய சாட்சியாக அவரது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் உள்ளார். அப்போதைய குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் நடிகை ஸ்டார்மிக்கு பணம் வழங்கியதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தேர்தல் பிரச்சார வணிக சட்டத்தின் கீழ் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இது முக்கிய கிரிமினல் வழக்காக கருதப்படுகிறது. இந்த வழக்கில் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE