துருக்கி பூகம்பத்தால் பிரிந்து 2 மாதங்களுக்குப் பிறகு சேர்ந்த தாய் - சேய்!

By செய்திப்பிரிவு

அங்காரா: துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட பேரழிவு பூகம்பத்தால் பிரிந்த குழந்தையும், தாயும் மீண்டும் சேர்ந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி - சிரிய எல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு 56,000 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்த நிலையில், துருக்கியில் பிப்ரவரி 6-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு ஹடாய் பகுதியிலிருந்து 3 மாதக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் குழந்தையின் தந்தையும், இரு சகோதரர்களும் உயிரிழந்தனர். குழந்தையின் தயார் யாரென்று அப்போது தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து அரசு பராமரிப்பில் குழந்தை இருந்து வந்தது. இந்த நிலையில், இரு மாதங்களுக்குப் பிறகு டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையில் அந்தக் குழந்தை, தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து துருக்கியின் குடும்பம் மற்றும் சமூக சேவை துறையின் அமைச்சர் டெர்யா கூறும்போது, “ஒரு தாயையும் குழந்தையையும் மீண்டும் இணைப்பது உலகின் மிக மதிப்புமிக்க பணிகளில் ஒன்றாக கருதுகிறோம்” என்றார்.

குழந்தையின் தயார் பெயர் யாஸ்மின் என்றும், அவர் 51 நாட்களாக துருக்கியின் அடானா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தை இரண்டு மாதங்களுக்குப் பிறகு தாயாருடன் இணைந்துள்ளது துருக்கி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE