‘ஹை ப்ரொஃபைல்’ படுகொலைகள்... - ரஷ்ய போர் பதிவர் டடார்ஸ்கி படுகொலை எழுப்பும் கேள்விகள்

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: ரஷ்யாவின் போர் பதிவர் விளாட்லென் டடார்ஸ்கி கடந்த ஞாயிறன்று செயிண்ட் பீட்டர்ஸ்பெர்கில் நடந்த ஒரு குண்டு வெடிப்புச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் 31 பேர் படுகாயமடைந்தனர். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் ரஷ்யாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம் மட்டுமல்ல இங்குதான் அதிபர் விளாடிமிர் புதினும் வசிக்கிறார். உயர் பாதுகாப்பு வரம்புக்குள் இருக்கும் ஒரு நகரில் நடந்த இந்தப் படுகொலை சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

யார் இந்த டடார்ஸ்கி? - டடார்ஸ்கியின் இயற்பெயர் மேக்ஸிம் ஃபாமின். இவர் ராணுவ பதிவராக அதுவும் புகழ்பெற்ற பதிவராக இருந்தார். 40 வயதான டடார்ஸ்கி ரஷ்யா உக்ரைன் மீதான போரை இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் நடத்த வேண்டும் என்று வெளிப்படையாக பதிவுகளை வெளியிட்டுவந்தார். அவருக்கு டெலிகிராம் மெசேஜிங் செயலியில் 5 லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்கள் இருந்தனர்.

டான்பாஸில் பிறந்த டடார்க்ஸி ஆரம்ப காலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்துவந்தார். பின்னர் நிதி நெருக்கடியால் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு கைதாகி சிறைக்குச் சென்றார். 2014-ல் டான்பாஸில் கிளர்ச்சி நடக்க சிறையிலிருந்து தப்பித்தார். பின்னர் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் இணைந்து டான்பாஸில் கிளர்ச்சியில் ஈடுபட்டார். ரஷ்யா உக்ரைன் போர் ஆரம்பித்தபோது முதலில் சில காலம் போரில் ஈடுபட்டவர் பின்னர் அதிலிருந்து விடுபட்டு போர் பற்றிய பதிவுகளை வெளியிடும் வ்ளாகர் ஆனார்.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைனின் 4 பகுதிகளை தன்னுடன் இணைத்தது. அப்போது க்ரெம்ளின் மாளிகையில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு புதின் தலைமை தாங்கினார். அந்த விருந்து நிகழ்வில் டடார்க்ஸி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ‘நாம் எல்லோரையும் வீழ்த்துவோம். நம்மை எதிர்க்கும் எல்லோரையும் கொன்று ஒழிப்போம். யாரிடம் திருடப்பட வேண்டுமோ அவர்களிடமிருந்து களவு செய்வோம். நாம் விரும்பும்படியே எல்லாம் அமையும். கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் டடார்க்ஸி கடந்த ஞாயிறு அன்று கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் பீட்டர்ஸ்பெர்க் நகரில் ஒரு சாலையோர உணவகத்தில் 100 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதில் டடார்ஸ்கிக்கு ஒரு பரிசுப் பொருள் வழங்கப்பட்டது. அந்தப் பரிசுப் பொருளில் இருந்த வெடிகுண்டுதான் அவரது உயிரையும் பறித்துள்ளது.

26 வயது இளம் பெண் கைது: இந்தச் சம்பவம் தொடர்பாக 26 வயது இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டார்யா ட்ரெபோவா என்ற அந்தப் பெண் அளித்த வாக்குமூல வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் அந்தப் பெண் "என்னிடம் அந்தப் பரிசுப் பொருளை டடார்க்ஸியிடம் ஒப்படைக்கப்பட மட்டுமே சொல்லப்பட்டது. அதில் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது" என்று கூறியுள்ளார். ஆனால், டார்யா ஏற்கெனவே ரஷ்யா உக்ரைனில் போர் நடத்துவதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகி இருக்கிறார். டார்யா சாமான்யர் அல்ல. அவர் தடை செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவாலினியின் குழுவைச் சேர்ந்தவர் என்று ரஷ்ய புலன் விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

என்ன காரணம்? - கடந்த 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் போருக்கு ஆதரவான கொலையான இரண்டாவது உயர் மட்ட நபர் டடார்ஸ்கி. ஏற்கெனவே டார்யா டுகினா என்ற பெண் கொலை செய்யப்பட்டார். மாஸ்கோவில் கார் குண்டு வெடிப்பில் இவர் கொலை செய்யப்பட்டார். இவர் ரஷ்யாவின் தேசியவாதி அலெக்ஸாண்டர் டுகினின் மகளாவார். இப்போது டடார்ஸ்கி கொல்லப்பட்டுள்ளார். இதனால் இதுபோன்ற ஹை ப்ரொஃபைல் கொலைகள் தொடரலாம் என்ற அச்சமும் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கொலைகளுக்குப் பின்னால் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்யா கூறும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோ "இதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் என்ன நடக்கிறது, மாஸ்கோவில் என்ன நடக்கிறது என்பது ரஷ்யாவின் கவலை. நான் எப்போதும் என் நாட்டைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE