பேரிடர் ஏற்படும்போது உலகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பேரிடர் ஏற்படும்போது உலகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பேரிடரை எதிர்கொள்வதற்கான உள்கட்டமைப்பு 2023-க்கான சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ''பேரிடர் ஏற்படும்போது உலகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏனெனில், நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ள இந்த உலகில், ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் பேரிடர், அதற்கு தொடர்பே இல்லாத மற்றொரு பிராந்தியத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதை கருத்தில் கொண்டே பேரிடரை எதிர்கொள்வதற்கான உள்கட்டமைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளில் இதில் 40 நாடுகள் இணைந்துள்ளன. பேரிடர் தொடர்பான இந்த மாநாடு, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பெரிய நாடுகள், சிறிய நாடுகள், உலகின் வடக்குப் பகுதி, தெற்குப் பகுதி என அனைத்தும் ஒன்றிணைவதற்கான ஒரு தளமாக மாறி இருக்கிறது.

உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது என்பது வெறும் பொருளாதார பலன்களுக்கானது அல்ல. மாறாக, பாதிக்கப்பட்டவர்களை எவ்வளவு வேகமாக தொடர்பு கொள்ள முடிகிறது, எந்த அளவு உதவ முடிகிறது என்பதற்கானது. மக்கள் நெருக்கடியான காலங்களை எதிர்கொள்ளும்போது ஒருவரும் விடுபட்டுவிடக்கூடாது; அனைவருக்கும் உதவி கிடைக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டதாக உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். போக்குவரத்து உள்கட்டமைப்பைப் போலவே சமூக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பும் முக்கியமானது. இந்தியாவையும் ஐரோப்பாவையும் தாக்கிய வெப்ப அலைகள், துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பங்கள் போன்ற பேரழிவுகள், உலகம் எதிர்கொள்ளும் சவால்களின் அளவை நினைவூட்டுகின்றன'' என பிரதமர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE