அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்படுவாரா?

By Guest Author

வாஷிங்டன்: கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு (44) பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் சிக்கியுள்ளார்.

வாயடைக்கப் பணம் வழக்கு: கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவின் லேக் டஹோவில் நடைபெற்ற கோல்ஃப் போட்டியின் போது ஸ்டார்மி டேனியல்ஸை, ட்ரம்ப் சந்தித்தார். அப்போது இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது நடிகை ஸ்டார்மி, குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்புடனான ரகசிய தொடர்பு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். நடிகையின் குற்றச்சாட்டை ட்ரம்ப் முற்றிலுமாக மறுத்தார்.

இந்த விவகாரத்தை மூடி மறைக்க நடிகை ஸ்டார்மிக்கு, ட்ரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ1.07 கோடியை கொடுத்தார். இதன்பிறகு மைக்கேல் கோஹனுக்கு, அந்த தொகையை ட்ரம்ப் வழங்கினார். இந்த தொகை ட்ரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் சட்டரீதியிலான செலவு என்று பதிவு செய்யப்பட்டது என்பது தான் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு. அமெரிக்காவில் பொய்யான வணிக செலவை காட்டுவது சட்டவிரோதம் ஆகும்.

இதன்படி முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் அட்டர்னி ஜெனரல் (அரசு வழக்கறிஞர்) ஆல்வின் பிராக் ஓராண்டாக விசாரணை நடத்தினார். பின்னர் கடந்த 30-ம் தேதி மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரி (மக்கள் நீதிமன்றம்) விசாரணை நடத்தியது. அப்போது ட்ரம்ப் மீது தேர்தல் பிரச்சார வணிக சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்ய கிராண்ட் ஜூரி உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன்படி அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் இவ்வழக்கு, ‘வாயடைக்க பணம் வழக்கு' (HUSH MONEY)என்று அழைக்கப் படுகிறது.

ட்ரம்ப் மீதான வழக்கின் முக்கிய சாட்சியாக அவரது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் உள்ளார். அப்போதைய குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில் நடிகை ஸ்டார்மிக்கு பணம் வழங்கியதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தேர்தல் பிரச்சார வணிக சட்டத்தின் கீழ் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இது முக்கிய கிரிமினல் வழக்காக கருதப்படுகிறது. இந்த வழக்கில் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ட்ரம்ப் இன்று ஆஜராகிறார். வழக்கு விசாரணைக்கு ட்ரம்ப் முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதால் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட வாய்ப்பில்லை. அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜராகும் போது அவரது விரல் ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் பதிவுகள் சேகரிக்கப்படும்.

ஜனநாயக கட்சியின் வியூகம்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ட்ரம்ப் களமிறங்கினால் ஆபாச பட நடிகை விவகாரத்தை ஜனநாயக கட்சி எழுப்பாது என்றே கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே அதற்குப் பதிலாக டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை ஆக்கிரமித்து வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தை ஜனநாயக கட்சி தலைவர்கள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஜார்ஜியா அதிபர் தேர்தலில் தலையிட்ட விவகாரம், அரசின் ரகசிய ஆவணங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றது தொடர்பாக ட்ரம்ப் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரங்களில் அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களைத் திரட்டி அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தால் அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முடியும். ஒருவேளை சட்ட ரீதியான பிரச்சினைகளைத் தாண்டி அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டால் அவருக்கு எதிராக வலுவான பிரச்சார வியூகங்களை ஜனநாயக கட்சி வகுக்க வேண்டும். இல்லையெனில் அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று அரசியல் நோக்கர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.

- நாராயண் லஷ்மண் | ‘தி இந்து’வில் இருந்து...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE