ட்விட்டர் செயலியின் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்: நீல குருவிக்கு பதிலாக நாய் படம்

By செய்திப்பிரிவு

சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூகவலைதள செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளார். ட்விட்டர் என்றாலே நினைவுக்கு வருவது நீல நிறக் குருவிதான். ஆனால் அந்தக் குருவியின் படத்திற்குப் பதிலாக ஒரு நாயின் படத்தை லோகாவாக மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இருப்பினும் ட்விட்டர் மொபைல் வெர்சனில் இந்த மாற்றம் அமல்படுத்தப்படவில்லை. எலான் மஸ்க்கின் இந்த திடீர் நடவடிக்கை ட்விட்டர் பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் மஸ்க். அது முதல் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். ப்ளூ டிக் கட்டண சந்தா முறை தொடங்கி பல மாற்றங்கள் இதில் அடங்கும். தளத்தில் தொழில்நுட்ப மாதிரியான அம்சங்கள் மட்டுமல்லாது நிர்வாக ரீதியாகவும் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு நடவடிக்கையும் இதில் அடங்கும்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ட்விட்டர் செயலியின் லோகோவையே மாற்றி அதிரடி காட்டியுள்ளார் எலான் மஸ்க்.

புதிய லோகோவின் பின்னணி: ட்விட்டரின் லோகோவை ஏன் மாற்றினார் என்பதற்கும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்திலேயே விளக்கமளித்துள்ளார். முன்னர் ஒரு பயனர் தன்னிடம் ட்விட்டர் லோகோவை2 'Doge' படமாக மாற்றக் கூறியதால் தான் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இந்த உரையாடல் நடந்துள்ளது. அப்போது அந்தப் பயனருக்கு எலான் மஸ்க், லோகோவை மாற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதன்படியே தற்போது நீல குருவிக்குப் பதிலாக Dogecoin லோகோவான நாய் படத்தை மாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையால் 'Dogecoin' எனப்படும் க்ரிப்டோகரென்சி நிறுவனத்தின் பங்குகள் 20% உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாய் ஜப்பான் நாட்டின் ஷிபு வகை நாயாகும். இது பிரபல Dogecoin கிரிப்டோகரன்ஸியின் லோகோவாகும். இந்த லோகோ அந்த நிறுவனத்தால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பிட்காயின் உள்ளிட்ட பிற கிரிப்டோகரன்ஸிகளைப் பகடி செய்வதற்காக இந்த லோகோ உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டரில் ஒரு மீமையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு காரில் ஷிபா வகை நாய் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளது. ஒரு போலீஸ் அதிகாரி அதனிடம் லைசன்ஸை பரிசோதிக்கிறார். அதில் நீலக் குருவி படம் இருக்க நாய் அது பழைய படம் என்று விளக்குவது போல் உள்ளது.

அதிக ஃபாலோயர்கள்: அதிரடி நடவடிக்கைகள், சர்ச்சைகள் எனக் குறைவில்லாவிட்டாலும் கூட ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபராக இருக்கிறார் எலான் மஸ்க். இந்த தளத்தில் இதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிக ஃபாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார் மஸ்க். அதன் காரணமாக தற்போது சுமார் 13,36,43,335 (இந்த செய்தி பதியப்பட்ட நேரத்தில் இருந்தோர் எண்ணிக்கை) ஃபாலோயர்களை கொண்டுள்ளார் மஸ்க். கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் 100 மில்லியன் ஃபாலோயர்களை மஸ்க் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE