வரலாறு காணாத மக்கள் போராட்டம்: இஸ்ரேலில் என்ன நடக்கிறது..? - ஒரு தெளிவுப் பார்வை

By இந்து குணசேகர்

கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வரலாற்றில் பதியும் மாபெரும் போராட்டத்தை இஸ்ரேல் மக்களும், எதிர்க்கட்சிகளும் அந்நாட்டில் முன்னெடுத்திருக்கிறார்கள். டெல் அவிவ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திக் கொண்டிருக்கும் இப்போராட்டங்கள் ‘இஸ்ரேலில் என்ன நடக்கிறது..?’ என உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஏன் இந்த போராட்டம்? - இஸ்ரேலில் நீதித் துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு ஈடுபட்டு வருகிறார். அதாவது, நீதித் துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித் துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சமநிலையை மீட்டெடுக்கவும் நீதித் துறையில் மாற்றம் கொண்டுவருவதாகச் சொல்லி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.

என்னென்ன மாற்றங்கள்: இஸ்ரேல் நீதித் துறையில் மூன்று முக்கிய மாற்றங்களை நெதன்யாகு கொண்டு வர இருக்கிறார். அவை:

* இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தின் சட்டங்களை மறுபரீசிலனை செய்து, அதன் அதிகாரத்தை குறைப்பது. உதராணத்துக்கு நீதிமன்ற உத்தரவுகளை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை மூலம் மீறலாம்.

* உச்ச நீதிமன்றம் உட்பட நீதிபதிகளை நியமிக்கும் குழுவில் அரசின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது. இதன்மூலம், யார் நீதிபதியாக வேண்டும் என்பது குறித்து தீர்க்கமான முடிவை அரசாங்கம் எடுக்கும் சூழல் உருவாகும்.

* இஸ்ரேல் அமைச்சர்கள் தங்கள் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைக்கு கீழ்படிய வேண்டிய அவசியமில்லை.

சீர்திருத்த நடவடிக்கைகளில் முதற்கட்டாமாக பதவியில் இருக்கும் பிரதமரை ‘பதவிக்கு தகுதியற்றவர்’ என்று அறிவிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் அதிகாரத்தை நீக்கும் சட்டம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கிளர்ந்த போராட்டம்... - நீதித் துறையின் மீதான இந்த சீர்திருத்த மாற்றங்கள் நாட்டின் ஜனநாயகத்தை படுகுழிக்கு தள்ளிவிடும் என்ற நிலைபாட்டில்தான் தற்போது இஸ்ரேல் மக்களும், நாட்டின் எதிர்கட்சிகளும் வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

12 வாரங்களாக தொடரும் இப்போராட்டத்தில், நாட்டின் வர்த்தக தலைநகரான டெல் அவிவில் இந்த வாரம் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீதியில் கூடி போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், அரசின் மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரும் பணிக்கு வர மறுத்துள்ளதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறிக்கு உள்ளாகும் சூழல் உருவாகி இருக்கிறது.

இதற்கிடையில், நாட்டில் நடக்கும் போராட்டங்கள் கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தி இருப்பதாக நெதன்யாகுவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேலண்ட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தான் கூறிய கருத்துக்காக கேலண்ட்டை நெதன்யாகு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். நீக்கப்பட்ட கேலண்ட் அரசாங்கத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் பிரபலமான அமைச்சர்களில் ஒருவர். அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பது கூடுதலான இஸ்ரேலியர்களை தெருக்களில் இறங்கி போராட வழிவகுத்திருக்கிறது.

போராட்டக்கார்கள் மீது போலீஸாரும், ராணுவமும் நடத்திய தடியடி தாக்குதலில் பலர் காயமடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும், தங்கள் போராட்டத்தை கைவிடாது மக்கள் தொடர்ந்து வருகிறார்கள். நெதன்யாகு நீதித் துறையின் மீதான தனது சீர்திருத்த நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இஸ்ரேலும் நெதன்யாகுவும்: இஸ்ரேலின் வலதுசாரி தலைவர்களில் மிகவும் அதிகாரமிக்கவராக கருதப்படும் நெதன்யாகு 1996 முதல் 1999 வரையிலும், 2009-ல் இருந்து தற்போது வரையிலும் பிரதமராக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் நெதன்யாகுவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இஸ்ரேல் இளைஞர்கள் முன்னரே வந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நெதன்யாகுவை பதவியைவிட்டு நீக்கும் வாய்ப்பாக இந்தப் போராட்டத்தை இஸ்ரேல் இளைஞர்களும்,இடதுசாரிகளும் பார்க்கின்றனர்.

இந்தச் சூழலில் இப்போரட்டம் உண்மையில் நெதன்யாகுவுக்கு பதற்றத்தை தந்திருக்கிறது என்பதே உண்மை. அதன் பொருட்டுதான் மற்ற சீர்திருத்தங்களை நிறைவேற்றும் கால அளவை அவர் தள்ளி வைத்துள்ளார். மேலும், போராட்டக்காரர்களையும், எதிரக்கட்சிகளையும் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

போராட்டம் குறித்து நெதன்யாகு பேசும்போது, “இந்த நாடு உடைபட நான் அனுமதிக்க மாட்டேன். நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன். அதற்கான வாய்ப்பை வழங்குகிறேன்” என்று பேசி இருக்கிறார். மேலும், இந்த சீர்திருத்தங்களால் நீதித் துறை அமைப்பு பலவீனம் அடையாது என்றும் அவர் உறுதியாக கூறி இருக்கிறார்.

வரும் நாட்களில் போராட்டக்காரர்களுடன் இஸ்ரேல் அரசு முன்னெடுக்கு பேச்சுவார்த்தை மிக முக்கியமானது. இதனை மையமாக வைத்துதான் நெதன்யாகுவின் பதவி தீர்மானிக்கப்பட இருக்கிறது என்பதே இப்போராட்டம் மூலம் இஸ்ரேல் மக்கள் கூறும் செய்தி!

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்