இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - சீனா மோதல்களுக்கு வாய்ப்பு: அமெரிக்க புலனாய்வு அமைப்பு

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக ஓர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: ''கடந்த 2020-ல் இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட மோதல் என்பது பல பத்தாண்டுகளில் ஏற்பட்டிராத ஒரு நிகழ்வு. இது இரு நாடுகளுக்கு இடையே கடினமான சூழலை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாலும், சில மையங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலும்கூட இரு நாடுகளுக்கு இடையேயான உறவு கடினமானதாகவே உள்ளது.

இந்தியா - சீனா இடையே தீர்க்கப்படாத எல்லைப் பகுதிகளில் தற்போது இரு நாடுகளுமே தங்கள் படைகளை அதிகரித்துள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிகழும் சிறிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் மோதலாக வெடிக்கும் என்பதை இதற்கு முந்தைய நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. இரண்டுமே அணு ஆயுத நாடுகள். இந்நிலையில், எல்லையில் படைகளை அதிகரிப்பது மோதலுக்கான அபாயத்தை அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் நலன்களுக்கு அச்சுறுத்தலை அளிக்கக்கூடியது. எனவே, அமெரிக்க அரசு இதில் தலையிட வேண்டும்.

இதேபோல், இந்தியா - பாகிஸ்தான் இடையேயும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை அனுப்பும் நீண்டகால வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு. பாகிஸ்தானின் இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயல்களுக்கு கடந்த காலத்தைவிட நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடுமையான பதிலடி கொடுக்கும் வாய்ப்பு அதிகம். எனவே, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இது காஷ்மீரில் வன்முறையையும் பதற்றத்தையும் அதிகரிக்கலாம். மேலும் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் இது வித்திடலாம்'' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாகிஸ்தான் - அமெரிக்கா இடையே பயங்கரவாத தடுப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தையில், பயங்கரவாத தடுப்பில் இரு நாடுகளின் பல்வேறு அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு, பிராந்திய பயங்கரவாத தடுப்பு குறித்த மதிப்பீடு, இணைய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் பாகிஸ்தானோடு இணைந்து செயல்பட அமெரிக்கா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும், பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இரு தரப்புக்கும் இருக்கும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE