ஆப்கனுக்கு கூடுதலாக 20 ஆயிரம் டன் கோதுமை - ஈரான் வழியாக அனுப்புகிறது இந்தியா

By செய்திப்பிரிவு

காபூல்: ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா - மத்திய ஆசிய கூட்டுப் பணிக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ் தான் ஆகிய நாடுகளின் சிறப்புத் தூதர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்கு பிறகு வெளியான கூட்டறிக்கையில், “ஆப்கன் மக்கள் அனைவரின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்தும் செய்யும் அரசியல் அமைப்பின் அவசியத்தை இந்தக் கூட்டம் வலியுறுத்தியது.

ஆப்கானிஸ்தானில் போதைப் பொருளுக்கு எதிரான ஐ.நா.வின் செயல்பாடுகளில் இந்தியாவின் பங்களிப்புக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்கெனவே 50 ஆயிரம் டன் கோதுமையை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பியுள்ளது. ஐ.நா. உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து ஈரான் வழியாக கூடுதலாக 20 ஆயிரம் டன் கோதுமை வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE