தீவிரவாதத்தை ஊக்குவிப்போர் மீது உறுதியான நடவடிக்கை அவசியம் - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஜெனீவா: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 52-வது கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர் வீடியோ பதிவு மூலம் தனது கருத்தை அனுப்பி உள்ளார்.

அதில் அவர் பேசியதாவது: கரோனா தொற்றால் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகள் எரிபொருள், உரம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் கடன்களால் கடுமையாக பாதித்துள்ளன.

இதற்கு நடுவே, உலக நாடுகளுக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. தீவிரவாதத்தை உலக நாடுகள் உறுதியுடன் எதிர்க்கும் என இந்தியா நம்புகிறது. தீவிர வாதம் என்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் ஆகும். தீவிரவாதத்தை ஊக்குவிப்போர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவில் மனித உரிமையை நிலைநாட்ட தேவையான நடவடிக் கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டு மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்து வருகிறது. இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பிபிசி விவகாரம்: டெல்லியில் ஜி20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, பிபிசி அலுவலகங்களில் நடந்த வருமான வரித் துறையினரின் ஆய்வு குறித்து க்ளெவர்லி கேள்வி எழுப்பினார்.

திட்டவட்டம்: இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, “இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், இந்த நாட்டின்சட்டம் மற்றும் இதர விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் பிபிசி நிறுவனம் முறையாக வரி செலுத்தவில்லை என்பது தெரிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE