பிபிசி விவகாரம் குறித்து ஜெய்சங்கரிடம் பேசினேன்: இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார்.

ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி இந்தியா வந்துள்ளார். மாநாட்டின் இடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, ஜேம்ஸ் கிளவர்லி சந்தித்து உரையாடினார். அப்போது, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த மாதம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து ஜெய்சங்கரிடம் ஜேம்ஸ் கிளவர்லி கேட்டதாக தகவல் வெளியானது.

"பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனை குறித்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர், இந்திய வெளியுறவு அமைச்சரிடம் எழுப்பினார்" என்று அரசு தரப்பில் ‘தி இந்து’-விடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், "இந்தியாவில் செயல்படும் அனைத்து இங்கிலாந்து நிறுவனங்களும் இந்திய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்று அவரிடம் உறுதியாக தெரிவிக்கப்பட்டது" என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஜேம்ஸ் கிளவர்லி, ''பிபிசி விவகாரம் தொடர்பாக ஜெய்சங்கரிடம் பேசினேன். பிபிசி சுதந்திரமானது என்றும் அதற்கும் இங்கிலாந்து அரசுக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தேன்'' என கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இரண்டு பகுதிகளைக் கொண்ட ஆவணப் படத்தை பிபிசி வெளியிட்டதை அடுத்து, அதன் அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்த சோதனைக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE