எப்போதுமில்லா உயர்வு | பாகிஸ்தானில் பிப்ரவரி மாத பணவீக்கம் 31.6% ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பணவீக்கம் முன் எப்போதுமில்லாத அளவாக பிப்ரவரி மாதத்தில் 31.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இறக்குமதி மிகப் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், பல்வேறு பொருட்களின் விலையும், சேவைக் கட்டணமும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், கராச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் பிரபல வணிக நிறுவனமான ஆரிப் ஹபிப் கார்பரேஷன், பாகிஸ்தானின் நுகர்வோர் விலை குறையீடு குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலையும் போக்குவரத்துக்கான கட்டணமும் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, அந்த மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீடு 31.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நுகர்வோர் விலை குறியீடு கடந்த ஜனவரி மாதத்தில் 27.6 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் சுமார் 4 சதவீதம் உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் நுகர்வோர் விலை குறியீடு குறித்த தகவல்கள் கடந்த 1965-ம் ஆண்டில் இருந்து பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இதுதான் அதிகபட்ச உயர்வு என்று ஆரிப் ஹபிப் கார்பரேஷன் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தகவல்படி, கிராமப்புற பணவீக்கம் 28.82 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் 35.56 சதவீதமாகவும் ஆண்டுக்காண்டு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது, எரிபொருள் செலவு மற்றும் நிர்வாகச் செலவு அதிகரிப்பு ஆகியவை பணவீக்கத்திற்குக் காரணம் என்று பாகிஸ்தான் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, அத்தியாவசியப் பொருட்களின் இருப்புக்கும் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நிலைமையை உண்ணிப்பாக கண்காணித்து வருவதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE