ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சர் கின் காங் இந்தியா வர உள்ளார்.

ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு வரும் வியாழக்கிழமை (மார்ச் 2) புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உள்பட பல்வேறு நட்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், அவரது அழைப்பை ஏற்று சீன வெளியுறவு அமைச்சர் கின் காங் புதுடெல்லி வர உள்ளார். இதனை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீன வெளியுறவு அமைச்சர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ல் சீன அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்குச் செல்வது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், இந்திய - சீன எல்லையில் கடந்த 2020 ஏப்ரலில் ஏற்பட்ட படை குவிப்பு காரணமாக இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளுக்கு இடையே போர் நிகழலாம் என்றும் கருதப்பட்டது. இதன் காரணமாக, சீன அமைச்சர்கள் யாரும் இந்தியாவுக்கு வரவில்லை.

இந்நிலையில், ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றது. இதையடுத்து, பல்வேறு மாநாடுகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு புதுடெல்லியில் வரும் வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சரின் அழைப்பை ஏற்று சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வர இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE