இந்தியாவின் வளர்ச்சியும் முக்கியத்துவமும் மேலும் அதிகரிக்கும்: அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்தியாவின் வளர்ச்சியும் அதன் சர்வதேச முக்கியத்துவமும் மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நான்சி இசோ ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

சிலிகான் பள்ளத்தாக்கிற்கு கடந்த வாரம் வந்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சர் நான்சி இசோ ஜாக்சன், அங்குள்ள சமுதாய தலைவர்களிடமும், இந்திய ஊடகங்களிடமும் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: ''ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. சர்வதேச அரங்கில் அதன் முக்கியத்துவம் மேலும் வளரும். அதேபோல், இந்திய-அமெரிக்க உறவும் வளரும். இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கான விசா காத்திருப்புக் காலத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''புதிய கண்டுபிடிப்புகள் மூலமும், அதிகரித்து வரும் வாய்ப்புகள் மூலமும் இந்தியாவும் அமெரிக்காவும் பலன்களைப் பெற்று வருகின்றன. அமெரிக்காவில் உள்ள இந்திய கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், சமூக தலைவர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகள் குறித்து நாங்கள் கேட்டு வருகிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE