ஓர் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் தடையற்ற மின் விநியோகம்

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கையில் ஓர் ஆண்டுக்குப் பிறகு தடையற்ற மின்சார விநியோகம் இன்று தொடங்குவதாக, அந்நாட்டு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பெரும் கடன் நெருக்கடியில் இலங்கை சிக்கியதை அடுத்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் தொடர் மின்வெட்டு இருந்து வந்தது. நாள்தோறும் ஒரு மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்து வந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நோக்கில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை 2.9 பில்லியன் டாலர் கடன் கோரி இருந்தது. இந்தக் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது.

இந்த நிபந்தனையை ஏற்று, இலங்கை அரசு மின்கட்டணத்தை உயர்த்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 70 சதவீத மின் கட்டணத்தை உயர்த்திய இலங்கை அரசு, கடந்த 6 மாதங்களில் இருமுறை 66 சதவீத மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அரசின் இந்த மின்கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மின் கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. எனினும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற இலங்கை அரசு மறுத்துவிட்டது.

அதேநேரத்தில், இலங்கையில் தடையற்ற மின்சார விநியோகத்தை அமல்படுத்த அதிகாரிகளுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டிருந்தார். அதிபரின் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) முதல் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்படும் என்று இலங்கை மின்சார வாரியமான சிலோன் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுக்கு இணங்க மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் உதவி பெறுவதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியம் என கூறியுள்ளார். ஓராண்டுக்குப் பிறகு தடையற்ற மின்சாரம் கிடைத்தாலும், அதற்காக தாங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம் என அந்நாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE