பூகம்ப பாதிப்பு | நிவாரண உதவிகளுக்காக எல்லையைத் திறக்க சிரியா சம்மதம்

By செய்திப்பிரிவு

டமஸ்கஸ்: சிரியாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு எல்லையில் இரு பகுதிகளை திறந்து விடுவதாக அந்நாட்டு அதிபர் பஷார் அறிவித்திருக்கிறார்.

சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளைக் கொண்டு செல்வதில் சுணக்கம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது. மேலும், நிவாரண உதவிகளை பெற முடியாமல் பாதையை தடுப்பதாக பஷார் அல் ஆசாத் அரசு மீது சிரியாவில் உள்ள தன்னார்வ அமைப்புகள் குற்றம் சுமத்தினர்.

இந்த நிலையில், நிவாரண பொருட்கள் வழங்குவதற்கு துருக்கி - சிரிய எல்லையில் இரு பகுதிகளை திறந்துவிடுவதாக சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார். பஷார் அல் ஆசாத்தின் முடிவை ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வரவேற்றுள்ளார்.

மேலும், இந்த இரண்டு எல்லைப் பகுதிகளும் நிவாரண உதவிகளை பெறுவதற்காக மூன்று மாதங்களுக்கு திறந்திருக்கும் என்று சிரிய அரசு தெரிவித்துள்ளது. ஐ.நா. பிரதிநிதிகளுடன் சிரிய அதிபர் பஷார் நடத்திய ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி - சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. இந்த சக்திவாய்ந்த பூகம்பத்துக்கு இதுவரை 37,000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ஒரு வாரமாக தொடரும் நிலையில், பூகம்பத்தின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE