துருக்கி பூகம்பம் | பிறந்து 10 நாள் ஆன குழந்தை 90 மணி நேரத்துக்குப் பின் தாயுடன் மீட்பு!

By செய்திப்பிரிவு

டமஸ்கஸ்: துருக்கியில் பிறந்து 10 நாட்களான குழந்தை 90 மணி நேரங்களுக்குப் பிறகு பூகம்ப இடிபாடுகளிலிருந்து தாயுடன் மீட்கப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கியில் ஹடாய் நகரமும் ஒன்று. இங்கு 5 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஹடாய் நகரில் பிறந்த 10 நாட்களான குழந்தை ஒன்று, அதன் தாயுடன் 90 மணி நேரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாகிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் தாயுடன் சிகிச்சை பெற்று வருகிறது. இருவரது உடல் நிலை குறித்து கூடுதல் தகவல் தெரியவில்லை.

பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு இடையே நீண்ட போராட்டங்களுக்குப் பிறகுப் உயிர்கள் மீட்கப்பட்டு வருவது துருக்கி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, இந்த பூகம்பத்தை இந்த நூற்றாண்டின் பேரழிவு என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். ஆனால், துருக்கி எதிர்கட்சியினர் எர்டோகனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எர்டோகன் நிலநடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பூகம்பம் மீட்பு நடவடிக்கைகளில் எர்டோகன் அரசு மீது துருக்கி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வரும் மே மாதம் துருக்கியில் பொதுத்தேர்தல் நடக்கும் நிலையில் இந்த இயற்கை பேரிடர் எர்டோகனின் அரசியல் பயணத்தில் பெரும் அடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24,000 பேர் பலி: துருக்கி - சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 24,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE