“டிக்‌ஷனரியில் கிட்டாத அர்த்தம் மிக்க சொற்கள்...” - இந்தியர்களின் உதவியால் துருக்கி தூதர் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

அங்காரா: துருக்கியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருளாக 100 போர்வைகளை அனுப்பிவைத்த இந்தியர்கள் சிலருக்கு இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராத் சுனெல் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார்.

துருக்கியின் காஜியன்டப் நகரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு இதுவரை துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி துருக்கியை அடுத்தடுத்து மூன்று பூகம்பங்கள் உலுக்கின. அதிகாலை 4.30 மணியளவில் 7.8 ரிக்டர் அளவிலும் மாலையில் 7.6 மற்றும் 6.0 ரிக்டரிலும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பத்தால் பாதித்த துருக்கியில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், துருக்கியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருளாக 100 போர்வைகளை அனுப்பிவைத்த இந்தியர்கள் சிலருக்கு இந்தியாவுக்கான துருக்கி தூதர் நெகிழ்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அக்கடிதத்தில், "இந்தியாவிலிருந்து அன்பை அனுப்பிவைக்கிறோம். துருக்கி மக்களுக்கு எங்களின் அக்கறை உரித்தாகுக இரண்டு நாட்களுக்கு முன்னர் நாங்கள் அனைவருமே துருக்கியில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்பையும், பொருட் சேதத்தையும் நினைத்து மிகவும் வருந்தினோம்.

துருக்கி மக்களின் இத்துயர்மிகு வேளையில் நாங்கள் துணை நிற்கிறோம். இந்தத் துயரைக் கடக்கும் துணிச்சலை துருக்கி மக்களுக்கு இறைவன் கொடுப்பாராக. துருக்கியை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் குல்தீப், அமர்ஜித், சுக்தேவ், கவுரவ் ஆகியோர் கையொப்பமிட்டிருந்ததனர்.

இந்தக் கடிதம் குறித்து இந்தியாவுக்கான துருக்கி தூதர், "சில நேரங்களில் வார்த்தைகளின் அர்த்தம் அகராதி சொல்லும் அர்த்தத்தைவிட ஆழமானதாக இருக்கும். இந்தியக் குடும்பம் ஒன்று எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் அத்தகைய வார்த்தைகள் தான். அவர்கள் துருக்கி மக்களுக்காக போர்வைகளை அனுப்பிவைத்துள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

அவரின் ட்வீட்டிற்குக் கீழ் நெட்டிசன்கள் பலரும் நெகிழ்ச்சியான பின்னூட்டங்களை பதிவு செய்து வருகின்றனர். #VasudhaivaKutumbakam என்ற ஹேஷ்டேகுடன் துருக்கி தூதர் இந்த ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார். இது உலகமே ஒரே குடும்பம் என்று பிரதமர் மோடி பல்வேறு அரங்குகளில் வலியுறுத்தும் கோஷம். அதனால் சிலர் மட்டும் அன்பை அரசியலாக்க வேண்டாம் என்று ஹேஷ்டேகை குறிப்பிட்டு பின்னூட்டங்கள் அனுப்பியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE