சிரியாவில் இடிபாடுகளில் பிறந்த குழந்தை ‘அயா’வை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம்!

By செய்திப்பிரிவு

டமஸ்கஸ்: சிரியாவில் பூகம்ப இடிபாடுகளில் பிறந்த பெண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானவர்கள் விரும்புவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் ஜிண்டெரிஸ் பகுதியில் திங்கள்கிழமை காலை பூகம்பம் ஏற்பட்டபோது ஒரு தம்பதியும், அவர்களது நான்கு குழந்தைகளும் தங்கள் அடுக்குமாடி கட்டிடத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். ஆனால், கட்டிடம் அவர்கள் மீது இடிந்து விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் பெண்ணின் உடல் அருகே பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. அப்பெண் இறக்கும் தருவாயில் இக்குழந்தையை பிரசவித்திருக்கலாம் என மீட்பு குழுவினர் நம்புகின்றனர். அக்குழந்தை பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இந்த நிலையில், பூகம்பத்தால் பெற்றோர், சகோதரர்களை இழந்த அப்பெண் குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானவர்கள் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அயா (அயா என்றால் அரபு மொழியில் அற்புதம் என்று பொருள்) என்று அக்குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அந்தக் குழந்தை சிகிச்சை பெற்று வரும் அஃப்ரின் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் கூறும்போது, “அயா திங்கட்கிழமை சிகிச்சைக்காக அழைத்து வரும்போது மோசான நிலையில் இருந்தாள். தற்போது அயாவின் உடல் நிலை தேறி உள்ளது” என்றார்.

குழந்தை அயாவை தத்தெடுக்க பலரும் விரும்புவது குறித்து மருத்துவமனை நிர்வாக தலைவர் காலித் கூறும்போது, “அயாவை தத்தெடுக்க விரும்புவதாக எனக்கு தினமும் 100-க்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் வருகிறது. ஆனால், நாங்கள் தற்போது யாரையும் அனுமதிக்கவில்லை. அயாவின் உறவினர்கள் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறோம். அயாவை இந்த மருத்துவமனை சொந்த மகளாகதான் பார்த்து வருகிறது” என்றார்.

குழந்தை அயா கண்டெடுக்கப்பட்ட ஜிண்டெரிஸ் பகுதி பூகம்பத்தால் 90% அழித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

துருக்கி - சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 21,500-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE