துருக்கி, சிரியாவில் பூகம்ப பலி 21,000-ஐ கடந்தது; அதிகளவில் சடலங்கள் மீட்பு

By செய்திப்பிரிவு

துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே அதிகளவில் சடலங்கள் மீட்பகப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000-ஐ கடந்து விட்டது. பலர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இதனால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. பல்வேறு நாடுகளில் இருந்து துருக்கி சென்றுள்ள மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியை தொடங்கினர்.

கடும் குளிருக்கு இடையிலும் மீட்பு பணி இரவு பகலாக தொடர்ந்தது. பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். கட்டிட இடிபாடுகள் இடையே மீட்கப்படும் சடலங்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதனால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000-ஐ கடந்து விட்டது. துருக்கியில் மட்டும் உயிரிழப்பு 17,674 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உயிரிழப்பு 3,377 ஆக அதிகரித்துள்ளது. சேதமடைந்த கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர்.

பூகம்பம் ஏற்பட்டு 3 நாட்கள் ஆகிவிட்டதாலும், கடும் குளிர் நிலவுவதாலும், இன்னும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE