ரஷ்ய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு - பிராந்திய பிரச்சினைகள் பற்றி ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்துப் பேசினார்.

ஜி-20 நாடுகள் அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்கே லாவ்ரோவ் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார். அங்கு ஆப்கானிஸ்தான் தொடர்பாக, நேற்று முன்தினம் நடந்த பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்கள் அல்லது என்எஸ்ஏ கூட்டத்தில் தோவல் பங்கேற்றார்.

இதில், தீவிரவாத செயல்களை அரங்கேற்ற ஆப்கன் நிலப்பகுதியை பயன்படுத்த எந்த ஒரு நாட்டையும் அனுமதிக்கக் கூடாது என தோவல் வலியுறுத்தினார்.

7 நாடுகளின் பிரதிநிதிகள்...

இக்கூட்டத்தில் ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இன்று (நேற்று) சந்தித்துப் பேசினார்.

இருவரும் இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தங்களை தொடர்ந்து அமல்படுத்துவது என இருவரும் ஒப்புக் கொண்டனர்’ என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE