துருக்கியில் 10 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - பூகம்ப உயிரிழப்பு 21 ஆயிரத்தை கடந்தது

By செய்திப்பிரிவு

காஜியன்டப்: துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் பாதித்த பகுதிகளில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே அதிகளவில் சடலங்கள் மீட்கப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை 21,000-ஐ கடந்துவிட்டது. துருக்கியில் இந்தியர் ஒருவரை காணவில்லை எனவும் தொலைதூர பகுதியில் சிக்கியுள்ள 10 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் வர்மா கூறியுள்ளார்.

தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. இதனால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின. பல்வேறு நாடுகளில் இருந்து துருக்கி சென்றுள்ள மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியை தொடங்கினர். கடும் குளிருக்கு இடையிலும் மீட்பு பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெறுகிறது. பலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கட்டிட இடிபாடுகள் இடையே மீட்கப்படும் சடலங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்புஎண்ணிக்கை 19,000-ஐகடந்து விட்டது.

சேதமடைந்த கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். பூகம்பம் ஏற்பட்டு 3 நாட்கள் ஆகிவிட்டதாலும், கடும் குளிர் நிலவுவதாலும், இன்னும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

துருக்கியில் பூகம்பம் பாதித்த அன்டக்யா மற்றும் கரமன்மராஸ் ஆகிய நகரங்களின் செயற்கைகோள் படங்களை பார்க்கும் போது இங்கு சேதம் மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. உயரமான கட்டிடங்கள் இருந்த இடமெல்லாம் தரைமட்டமாகியுள்ளன. காலியாக இருக்கும் மைதானங்களில் தற்போது நூற்றுக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மீட்பு பணியில் துருக்கி நாட்டின் 77 குழுவினர், 13 நாடுகளைச் சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு விமானப்படையின் ஐந்து சி-17 ஜம்போ விமானங்களில் 108 டன்களுக்கு மேல் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது. 6-வது ஜம்போ விமானத்தில் நிவாரண பொருட்களை அனுப்புவது பற்றியும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆபரேஷன் தோஸ்த்: துருக்கியில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்பு பணியை தொடங்கியுள்ளனர். இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் வர்மா கூறியதாவது: துருக்கியில் பூகம்பம் பாதித்த பகுதியில், பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர் ஒருவரை வர்த்தகப் பணிக்காக அனுப்பியிருந்தது. அவரை கடந்த 2 நாட்களாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினரும், பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திடமும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்பில் உள்ளது.

துருக்கியின் தொலைதூரப் பகுதியில் இந்தியர்கள் 10 பேர் சிக்கியுள்ளனர். ஆனால்,அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். துருக்கியின் அதானா கரில் இந்தியா சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் 75 பேர் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் மற்றும் உதவிகளை கேட்டுள்ளனர். துருக்கியில் இந்தியர்கள் சுமார் 3,000 பேர் உள்ளனர். இவர்களில் 1,800 பேர் இஸ்தான்புல் நகரை சுற்றிலும், 250 அங்காரா பகுதியிலும், மற்றவர்கள் துருக்கியின் பல பகுதிகளிலும் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

10 அடி நகர்வு: துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. இது பூமியில் துருக்கி அமைந்திருக்கும் டெக்னானிக் பிளேட்டுகள் எனப்படும் அடுக்கை 10 அடி தூரத்துக்கு நகர்த்தியுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அடியில் உள்ள அனடாலியன் பிளேட், அரேபியன் பிளேட் மற்றும் யூராசியன் பிளேட் என்ற அடுக்குகளின் எல்லையில் துருக்கி அமைந்துள்ளது. இதனால் நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் அதிகம். துருக்கியில் தற்போது ஏற்பட்ட பூகம்பத்தால், அனடாலியன் பிளேட் மற்றும் அரேபியன் பிளேட் பகுதியில் 225 கி.மீ தூரத்துக்கு நொருங்கியுள்ளன. இது துருக்கியை பூமியில் 10 அடி தூரத்துக்கு நகர்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE