“நான் மீளவில்லை” - தாக்குலுக்குப் பிறகு சல்மான் ருஷ்டி பகிர்ந்த புகைப்படம்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: “நியூயார்க் நிகழ்வில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என்னை மனரீதியாகவும் பாதித்தது” என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஓர் இலக்கிய நிகழ்வில் பேசிக்கொண்டு இருக்கும்போது தாக்குதலுக்கு உள்ளானார். இந்தத் தாக்குதலில் சல்மான் ருஷ்டி ஒரு கண் பார்வையை இழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு பிரபல பத்திரிகை நிறுவனத்துக்கு சல்மான் ருஷ்டி நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் அவர் பகிர்ந்தது: “அந்தத் தாக்குதல் என்னை மனரீதியாக பாதித்தது. நான் மீண்டும் எழுதுவது மிகவும் கடினமாக இருந்தது. நான் எழுத உட்காருவேன், ஆனால் எதுவுமே நடக்காது. நான் எழுதுவேன், ஆனால் அவை எல்லாம் வெறுமையாக இருந்தது. அடுத்த நாள் அவற்றைக் குப்பைத் தொட்டியில் தூக்கி போட்டுவிடுவேன். உண்மையில் அந்த சம்பவத்திலிருந்து நான் வெளியேவரவில்லை.

உண்மையில் பெரிய காயங்கள் எல்லாம் விரைவில் குணமாகிவிடும். அதுபோலவே பெரிய காயங்கள் சரியான நிலையில், என் கையில் ஏற்பட்ட சிறிய காயங்கள் இதுவரை சரியாகவில்லை. அதற்கு, சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனால, நான் நன்றாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், புகைப்படம் ஒன்றையும் சல்மான் ருஷ்டி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இந்தியாவின் மும்பை நகரில் பிறந்தவர் அகமது சல்மான் ருஷ்டி. பின்னாளில் அவரது குடும்பம் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தப் புத்தகம் இன்றளவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதில், ஈரான் சல்மான் ரூஷ்டி தலைக்கு விலையும் நிர்ணயித்தது. இதன் காரணமாக சல்மான் ருஷ்டி தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் சல்மான் ருஷ்டி கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது,

இந்தத் தாக்குதலில் சல்மான்கானின் ஒரு கண் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் ஹாதி மட்டர் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சல்மான் ருஷ்டி மீதான இந்தத் தாக்குதலை எழுத்தாளர்கள் பலரும் கண்டித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE