காத்மாண்டு: நேபாளத்தில் நேரிட்ட விமான விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். 4 பேரை காணவில்லை.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கராவுக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 10.33 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் நேபாளத்தை சேர்ந்த 53 பேர், இந்தியாவை சேர்ந்த 5 பேர், ரஷ்யாவை சேர்ந்த 4 பேர், கொரியாவை சேர்ந்த 2 பேர், பிரான்ஸ், ஆப்கானிஸ்தானை சேர்ந்த தலா ஒருவர் என 68 பயணிகளும் விமானி உள்ளிட்ட 4 ஊழியர்களும் பயணம் செய்தனர்.
போக்காரா விமான நிலையத்தில் எட்டி எர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. தரையில் மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து பல மணி நேரம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
ராணுவம், காவல் துறையை சேர்ந்த 300 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 பேரை காணவில்லை. அவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களின் உடலை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டு இருக்கிறது.
» சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பாரா கோலி? - சுனில் கவாஸ்கர் பதில்
» விரைவில் களத்தில் சந்திக்கலாம்: விபத்துக்கு பிறகு மீண்டு வரும் ரிஷப் பந்த் ட்வீட்
5 இந்தியர்கள் உயிரிழப்பு
நேபாள விமான விபத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த அனில் ராஜ்பர் (28), விஷால் சர்மா (23), அபிஷேக் சிங் குஷ்வாகா (23), சோனு ஜெய்ஸ்வால் (28) ஆகிய 4 பேரும் பிஹாரை சேர்ந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலும் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 4 பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இதில் அனில் ராஜ்பர், ஜாகுராபாத்தில் இ-சேவை மையத்தை நடத்தி வந்தார். விஷால் சர்மா டிவிஎஸ் நிறுவனத்திலும், அபிஷேக் இ-சேவை மையம், சோனு மதுபான விடுதியும் நடத்தி வந்தனர்.
அனில் ராஜ்பருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதை கொண்டாட நண்பர்களுடன் அவர் நேபாளத்துக்கு சென்றுள்ளார். காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோயிலில் வழிபாடு நடத்திய அவர்கள், அங்கிருந்து சுற்றுலாத் தலமான போக்கராவுக்கு விமானத்தில் சென்றனர்.
அவர்களில் சோனு ஜெய்ஸ்வால் விமான பயணத்தை நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பு செய்து வந்தார். விமான விபத்தின் கடைசி நிமிடங்களும் பேஸ்புக் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
கருப்பு பெட்டிகள் மீட்பு
விமானி அறை மற்றும் விமானத்தின் வால் பகுதியில் கருப்பு பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும். விமானி அறையின் உரையாடல்கள், பயணிகளின் உரையாடல்கள், விமானத்தின் வேகம், உயரம், திசை உள்ளிட்டவை கருப்புப் பெட்டியில் பதிவாகும்.
விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்தாலும் கருப்பு பெட்டி சேதமடையாது. கடலில் மூழ்கினாலும் 3 மாதங்கள் வரை பழுதடையாது. நேபாள விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகளும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டன. அந்த நாட்டு ராணுவம் அவற்றை ஆய்வு செய்து வருகிறது.
ஒரு நாள் துக்கம்
நேபாள பிரதமர் பிரசண்டாவின் அறிவிப்பின்படி, விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக அந்த நாடு முழுவதும் நேற்று ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் அரைக் கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய 5 நிபுணர்கள் அடங்கியகுழுவை நேபாள அரசு நியமித்துள்ளது. அந்த குழு விரைவில் அரசிடம் அறிக்கையை தாக்கல்செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
விபத்துக்கானகாரணம் என்ன?
நேபாளத்தின் போக்கரா அருகே சீனா உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் இரு வாரங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.
இது சேதி நதியின் அருகே இருப்பதால் விமானத்தில் பறவைகள் மோதும் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் சீனா விமான நிலையத்தை கட்டியுள்ளது. மேலும், இந்த விமான நிலையம் மலைப்பகுதியில் உள்ளது. திறமைவாய்ந்த விமானிகளால் மட்டுமே இங்கு விமானங்களை பத்திரமாக தரையிறக்க முடியும். விபத்துக் குள்ளான விமானம் 2007ல் இந்தியாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வாங்கியது. பின்னர் தாய்லாந்தின் நோக் ஏர் நிறுவனத்துக்கு கைமாறி 2019-ம் ஆண்டில் எட்டி ஏர்லைன்ஸ் வாங்கி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago