தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியது

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை நேற்று முடங்கியது.

உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட விமான நிலையத்தின் எல்லையில், விமானத்தை இயக்கும் விமானி அதன் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பில் இருப்பார்.

அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் விமானக் கண்காட்சிகள், பாராசூட் சாகசம், பட்டம் திருவிழா, லேசர் நிகழ்ச்சி, ராக்கெட் சோதனை, போர் பயிற்சி, உயரமான கட்டிடங்களில் விளக்குகள் எரியாமல் இருப்பது, எரிமலை வெடிப்பு, பறவைகள் நடமாட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள் குறித்தும் கட்டுப்பாட்டு நிலையங்கள் மூலம் விமானிகளுக்குத் தெரிவிக்கப்படும். இந்த பாதுகாப்பு நடைமுறை என்ஓடிஏஎம் (NOTAM) என்று அழைக்கப்படுகிறது. விமானிகளுக்கு புரியும் வகையில் சில குறியீடுகள் மூலம் என்ஓடிஏஎம் அறிவிப்பு வழங்கப்படும்.

அமெரிக்க விமானப் போக்கு வரத்துத் துறையின் என்ஓடிஏஎம் தொழில்நுட்பத்தில் நேற்று கோளாறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், அமெரிக்கா முழுவதும் உள்நாட்டு, பன்னாட்டு விமானங்கள் உடனடியாக தரையிறங்கு மாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியது. 5,000-க்கும் மேற் பட்ட உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் ஆங்காங்கே உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன. 600 விமான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

இதன் காரணமாக அமெரிக்க விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.

சைபர் தாக்குதலா?: உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இடையே மோதல் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கடலுக்கு அடியில் ராட்சத குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ராட்சத குழாய் மர்மமான முறையில் தகர்க்கப்பட்டது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அத்துடன், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங் களை வழங்கி வருகிறது.

இதற்குப் பழிவாங்கும் வகையில் ரஷ்ய ஹேக்கர்கள், அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறையின் இணையக் கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்தியிருக்கக்கூடும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ரஷ்யாவின் நட்பு நாடுகளான சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளின் ஹேக்கர்களும் கைவரிசை காட்டியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா மறுப்பு: இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சைபர் தாக்குதல் நடந்ததாக தெரியவில்லை. எனினும், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுவாக, விமான சேவை பாதிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை எவ்வித விளக்கமும் அளிப்பது கிடையாது. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக விமான சேவை பாதிப்பு குறித்து அதிபர் மாளிகை விளக்கம் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நேற்று கூறும்போது, "அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமான சேவைகளிலும் பாதிப்பு இல்லை. அமெரிக்க விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர் பார்க்கிறோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE