இந்தியாவுடனான உறவு மேம்பட விரும்புகிறோம் - சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் கீன் கேங் தகவல்

By செய்திப்பிரிவு

பெய்ஜிங்: இந்தியாவுடனான உறவு மேம்பட சீனா விரும்புகிறது என அதன் புதிய வெளியுறவு அமைச்சர் கீன் கேங் தெரிவித்துள்ளார்.

சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இருந்த வாங் இ-க்குப் பதில், புதிய வெளியுறவு அமைச்சராக கீன் கேங் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். இவர் அமெரிக்காவுக்கான சீன தூதராக இருந்தவர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 13வது தேசிய மாநாட்டில் இவரை புதிய வெளியுறவு அமைச்சராக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. வாங் இ தற்போது சீன கம்யூனிச கட்சியின் மத்திய குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து அமெரிக்காவின் 'The National Interest' என்ற பத்திரிகையில், 'சீனா உலகை எவ்வாறு பார்க்கிறது?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில், பல்வேறு நாடுகளுடன் சீனாவுக்கு இருக்கும் உறவு, உறவுகளை வலுப்படுத்துவதில் அதற்கு இருக்கும் விருப்பம், சீனா மீதான முக்கிய விமர்சனங்களுக்கு அதன் விளக்கம் என பல்வேறு விஷயங்கள் குறித்துளைப் பற்றி கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உடனான உறவு குறித்தும், எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கீன் கேங், ''இந்தியா உடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என சீனா விரும்புகிறது. எல்லைப் பிரச்சினையைப் பொருத்தவரை, எல்லைகளைப் பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இருதரப்பும் விருப்பத்துடன் உள்ளன.'' எனத் தெரிவித்துள்ளார்.

தைவான் விவகாரம் குறித்து குறிப்பிட்டுள்ள கீன் கேங், ''அமைதிக்கான வலிமையான சக்தியாக சீனா திகழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தைவானில் ஏற்பட்ட பதற்றத்திற்கு சீனா காரணம் அல்ல; அமெரிக்காவே காரணம். ஒரே சீனா என்ற சீன கொள்கைக்கு எதிராக தைவானில் உள்ள சில பிரிவினைவாதிகளும், அவர்களுக்கு உதவும் வெளிநாட்டு சக்திகளுமே தற்போதுள்ள பிரச்சினைகளுக்குக் காரணம்.'' என கீன் கேங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE