சீனாவின் கோவிட் நிலவரத்தால் பதற்றம் தேவையா? - ஒரு பார்வை

By இந்து குணசேகர்

பீஜிங்: அக்டோபர் மாதம் இறுதி முதல் சீனாவில் கரோனா பரவல் வேகமெடுத்தது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சீனாவின் நிலைமை பிற உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்தது. மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ, பொருளாதாரம் சரியுமோ என்பன போன்ற கேள்விகள் எழுந்து வந்தன. அச்சம் கருதி, சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனைகள் அவசியம் என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. 2023-ஆம் ஆண்டை வரவேற்க உலக நாடுகள் தயாராகி உள்ள நிலையில், சீனாவைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என மருத்து நிபுணர்கள் அறிவித்துள்ளனர். அவ்வாறான சூழலில் சீனாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

சீனாவும் கரோனா கட்டுப்பாடுகளும்.. - 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கும் கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. தொற்று தீவிரம் குறைந்த பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், சீனா கரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடித்து வந்தது. இதனால், நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவுக்கு உள்ளானதோடு, மக்களும் உளவியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதனால், சீனாவின் தீவிர ஊரடங்குக்கு உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில்தான், சில வாரங்களுக்கு முன்பு சீனா அதன் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

அதன் காரணமாக சீனா முழுவதும் கரோனா அதிகரித்தாலும் நெரிசல் மிக்க பகுதியாக கருதப்படும் பீஜிங், ஹாங்காங் போன்ற பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படவில்லை. மக்கள் தங்களது அன்றாட வேலைகளை செய்ய எந்தத் தடையும் சீன அரசு இம்முறை விதிக்கவில்லை. இதனால் லட்சக்கணக்கான மக்கள் நாளும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சீன மக்களும் பிற நாடுகளைபோல் கரோனாவுடன் வாழத் தயாராகி வருகின்றனர்.

சீனாவில் தீவிர கரோனா பரவலுக்கு காரணம் என்ன? - 2019-ஆம் ஆண்டு கரோனா வைரஸ் கண்டறியப்பட்டத்திலிருந்து சீனா கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைபிடித்ததை நாம் அனைவரும் அறிவோம். இதன் காரணமாக சீனாவின் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் கரோனா தொற்றால் குறைவான எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் பெருமளவும் பதிவாகவில்லை. தொடர் கட்டுப்பாடுகளால் மக்களுக்கு கரோனாவுக்கு எதிராக இயற்கையாகவே உருவாக்கும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் இறுதி முதல் ஒமைக்ரான் திரிபு காரணமாக கரோனா மீண்டும் பரவத் தொடங்கியது. கரோனா பரவல் தீவிரமாக இருந்ததால் நாடு முழுவதும் மருந்து பொருட்களின் தட்டுப்பாடு ஒருபுறம் நீடிக்க, மறுபுறம் மருந்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு மையங்கள் நிரம்பி வழிந்தன. இதனால் ஒரே அறையில் 10-க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெறும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தின.

சீனாவில் நவம்பர் மாதத் தொடக்கத்தில் தினசரி 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால், வாரத்தில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். டிசம்பர் 15-ஆம் தேதிக்குப் பிறகு சீனாவில் கரோனா குறையத் தொடங்கியது.’worldometers’ தளத்தின் தகவலின்படி சீனாவில் இன்று 7,204 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.

கரோனா இறப்பை பொறுத்தவரை சீனா இதுவரை உறுதியான தகவலை பொதுவெளியில் அளிக்கவில்லை. மேலும், கடந்த சில வாரங்களில் கரோனாவினால் உயிரிழப்பு பூஜ்ஜியம் என்ற தகவலையே சீனா அளித்து வந்தது. ஆனால் ’worldometers’ போன்ற தளங்களில் கடந்த 30 நாட்களாக, சீனாவில் கரோனாவுக்கு தினசரி ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் ஜனவரி 8-ஆம் தேதி சீனப் புத்தாண்டு என்பதால்,கொண்டாட்டங்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் இடம்பெயர்வார்கள் என்று கருதப்படுகிறது. இதனால் தொடர் கண்காணிப்பில் சீனா இருப்பது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

எம்ஆர்என்ஏ தடுப்பு மருந்துக்கு தயாராகும் சீனா: சீனா கரோனாவை கையாள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளான சினோஃபார்ம், சினோவாக் போன்ற தடுப்பூசிகளையே மக்களுக்கு செலுத்தியது. வெளிநாடுகளில் பரவலாக செலுத்தப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை சீனா பயன்படுத்தவில்லை.

சீனாவில் இதுவரை 87% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி உள்ளார்கள். ஆனால், ஒமைக்ரான் வைரஸின் தொற்றுப் பரவல் தீவிரமாக இருப்பதால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் தொற்றை கட்டுப்படுத்த கைக்கொடுக்கவில்லை. இதன் காரணமாக எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை செலுத்தும் முடிவுக்கு சீனா வந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதல்கட்டமாக சீனாவில் உள்ள ஜெர்மனி குடிமக்களுக்கு எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை சீனா செலுத்த இருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் அறிவுரை: சீனாவின் தற்போதையை நிலவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு, உலக நாடுகள் பலவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் சீன சுகாதார நிபுணர்களுடன் நடந்த கூட்டத்தில், சீனாவில் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் எவ்வளவு பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் முதலான விவரங்களை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் தற்போதைய நிலவரத்தை பகிர்ந்துகொள்ள ஒருவழியாக சீனா ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் ஒமைக்ரான் எந்தவிதமான பாதிப்பை சீனாவில் ஏற்படுத்தியுள்ளது என்பதை உலக நாடுகள் அறியவுள்ளன.

கரோனாவை உலக நாடுகள் வென்றுவிட்டது என்று பெருமூச்சு விட்ட தருணத்தில், சீனாவில் ஏற்பட்ட இந்த திடீர் கரோனா பரவல் ஒருவித பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது உண்மைதான். இருப்பினும் பெரும்பாலான நாடுகள் மூன்று கரோனா அலைகளை எதிர்கொண்ட படிப்பினையை பெற்றுள்ளதால் வரும் நாட்களில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும், அதனை முழுவீச்சில் எதிர்கொள்ள நம்பிக்கையுடன் உள்ளன என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி.

இந்தியாவில் நம்பிக்கை: காஷ்மீரிலுள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனை இயக்குநராக டாக்டர் பர்வேஸ் கவுல் உள்ளார். சீனாவில் கரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் பரவிவரும் வேளையில் அது இந்தியாவில் பெருமளவு பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று டாக்டர் பர்வேஸ் கவுல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கரோனா வைரஸை முற்றிலுமாக ஒழித்து விட முடியுமா என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை என்பதுதான். சீனாவைப் போல கரோனாவிலிருந்து பல்வேறு வகை புதிய பிறழ்வுகள் தோன்றினால், அவ்வப்போது அதன் தாக்கம் இருக்கும். இந்தியாவிலும் இதுபோன்ற வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இதுபோன்ற வைரஸ் இந்தியாவில் பரவி சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுள்ளனர். எனவே, அவர்களை கரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் ஏராளமான பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

பரவலான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக நமது நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக பூஸ்டர் ஊசியைப் போட்டுக் கொள்ளவேண்டும். இதற்காக மத்திய அரசு வெளியிடும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்