சீன அச்சுறுத்தல் எதிரொலி: கட்டாய ராணுவ சேவையை ஓராண்டாக உயர்த்த தைவான் முடிவு

By செய்திப்பிரிவு

தைபே: சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து தங்கள் நாட்டு இளைஞர்களுக்கான கட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓராண்டாக உயர்த்த தைவான் முடிவு செய்துள்ளது.

தைவான் எல்லைப் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனா ராணுவம் அவ்வப்போது ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தைவான் - சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தைவானில் காட்டாய ராணுவ சேவைக் காலத்தை ஓர் ஆண்டாக உயர்த்த அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தைவான் அதிபர் சாய் இங்-வென் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, ”2024-ஆம் ஆண்டு முதல் தைவானில் கட்டாய ராணுவ சேவை நான்கு மாதத்திலிருந்து ஓர் ஆண்டாக உயர்ந்தப்படுகிறது. தைவான் அமைதியை விரும்புகிறது. ஆனால், தற்காப்பு என்பது அவசியம்.

தைவான் ராணுவ அளவில் பலமாக இருக்கும் வரை, அது உலகம் முழுவதும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் தாயகமாக இருக்கும். தைவான் ஒரு போர்க்களமாக மாறாது. நாங்கள் இந்த உலகிற்கு ஒன்றைக் கூற விரும்புகிறோம். ஜனநாயகம் - சர்வாதிகாரம் என்றால் நாங்கள் ஜனநாயகத்தில்தான் நம்பிக்கை வைத்துள்ளோம். போருக்கும் அமைதிக்கும் இடையில், நாங்கள் அமைதியைத்தான் வலியுறுத்துகிறோம். தாயகத்தைப் பாதுகாக்கவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் தைரியத்தையும் உறுதியையும் காட்டுவோம்” என்றார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசியப் பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு வருகை தந்தார். ஆனால் நான்சியின் வருகையை சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. நான்சியின் வருகை காரணமாக தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE