துபாயில் ஓட்டுநராக பணிபுரியும் இந்திய இளைஞருக்கு ரூ.33 கோடி லாட்டரி!

By செய்திப்பிரிவு

துபாய்: வளைகுடா நாடுகளில் செழிப்பானதாக அறியப்படும் துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இந்திய இளைஞர் அஜய் ஓகுலாவுக்கு ரூ.33 கோடி லாட்டரி அடித்துள்ளது. எமிரேட்ஸ் ட்ரா என்ற லாட்டரியை வாங்கிய அவர் ஜாக்பாட் அடித்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளார்.

இது தொடர்பாக அவர் கலீஜ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், "நான் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவன். இங்கே துபாயில் கடந்த 4 வருடங்களாக பணி புரிகிறேன். தற்போது ஒரு நகைக் கடையில் ஓட்டுநராக உள்ளேன். மாதம் 3200 திர்ஹம் சம்பாதிக்கிறேன். அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 72 ஆயிரத்து 185 ஆகும்.

இந்த லாட்டரியை நான் வாங்கும்போது இவ்வளவு பெரிய ஜாக்பாட் அடிக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் எனக்கு மிகப் பெரிய தொகை கிடைத்துள்ளது. நான் 2 டிக்கெட்டுகளை வாங்கினேன். எமிரேட்ஸ் லக்கி ட்ரா கம்பெனியில் இருந்து வாங்கினேன். நான் வாங்கிய டிக்கெட்டுக்கு 15 மில்லியன் அராப் எமிரேட்ஸ் தினார் பரிசாகக் கிடைத்துள்ளது. நான் இத்தனை கோடி பணத்தை லாட்டரியில் பெற்றுள்ளேன் என்று கூறியபோது எனது குடும்பத்தினர் யாரும் நம்பவில்லை.

இப்போது செய்திகளில் என்னைப் பற்றிய தகவல் வெளியானதால் அவர்கள் நம்புகின்றனர். எனது சொந்த ஊரிலும் அருகிலுள்ள கிராமங்களிலும் நலிந்தோருக்கு நிறைய தான தர்மங்களைச் செய்வேன்” என்று கூறினார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பவுலா லீச் என்ற 50 வயது நபர் 77,777 திர்ஹம் பரிசு வென்றுள்ளார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக துபாயில் மனிதவள மேம்பாட்டு அலுவலராக பணியாற்றி வந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE