சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவுகிறது கரோனா - இந்தியாவில் மரபணு பரிசோதனை நடத்த மத்திய அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி/பெய்ஜிங்: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிவேகமாக கரோனா வைரஸ் பரவுகிறது. இது தொடர்பாக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

2019 இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி, உலக நாடுகளை அச்சுறுத்தின.

எனினும், கடந்த ஓராண்டாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவல் குறைந்து, படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சீனாவில் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. அந்த நாட்டில் ஒமைக்ரான் பி.எஃப்.7 என்ற வகை வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில அரசுகளுக்கும் நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சீனா, அமெரிக்கா, பிரேசில், தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கரோனா வைரஸ் தொற்றை முன்கூட்டியே கண்டறிய வேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

அனைத்து கரோனா நோயாளிகளின் மாதிரிகளையும் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். நாள்தோறும் மரபணுப் பரிசோதனை நடத்த வேண்டும். இதற்கு இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பின் (இன்சாகாக்) ஆய்வகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்போதுதான், புதிய வகை கரோனா வைரஸ்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவை பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்குத் தேவையான உதவிகளை மத்திய சுகாதாரத் துறை வழங்கும். இவ்வாறு ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

60% சீன மக்கள் பாதிக்கப்படுவர்: தொற்றுநோய் நிபுணரும், சுகாதாரப் பொருளியல் வல்லுநருமான எரிக் பெய்கிள் டிங், வால் ஸ்டீரிட் ஜெர்னல் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, பெய்ஜிங்கில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை மருத்துவமனைகளில் அதிகம் காணமுடிகிறது.

இதேநிலை நீடித்தால், சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீத மக்கள் கரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது மிகவும் ஆபத்தான விஷய மாகும். இவ்வாறு அவர் கூறினார்.

வால் ஸ்டீரிட் ஜர்னல் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில், ‘‘சீனாவில் நவம்பர் 19 முதல் 23-ம் தேதி வரை 4 பேர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்ததாக பெய்ஜிங் மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், உண்மையில் அங்கு உயிரிழப்பு அதிகமாக உள்ளது. பெய்ஜிங் நகரில் கரோனாவால் உயிரிழப்போர் குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE