ஒசாமாவுக்கு புகலிடம் கொடுத்தவர்கள் ஐ.நா.வில் பிரசங்கம் செய்ய தகுதியில்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: ஒசாமா பின் லேடனுக்கு புகலிடமாக இருந்த பாகிஸ்தான் ஐ.நா. அவையில் காஷ்மீர் விவகாரம் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பிரசங்கம் செய்யத் தகுதி இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் இந்தியா 2 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்திக்கிறது. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
குறிப்பாக, இன்று 15-ம் தேதி ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.

முன்னதாக நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து தேசங்கள் மீள்வது, காலநிலை மாற்றம், பயங்கரவாதம், மோதல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "நாங்கள் பலதரப்பு ஒத்துழைப்பின் அவசியம் பற்றி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இதில் உலக நாடுகள் ஒருமித்த கொள்கையை ஏற்படுத்துவதை தாமதிக்கக் கூடாது.
காலநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு என பல விஷயங்களில் சிறந்த தீர்வை எட்ட நாங்கள் முயற்சிக்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்த அவை கண்டிக்க வேண்டும். ஒசாமா பின் லேடனுக்கு புகலிடம் கொடுத்த நாடு, அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதலை ஏவிவிட்ட நாடு ஐ.நா. அவையில் பிரசங்கம் செய்ய தகுதி இல்லை" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE