ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை

By செய்திப்பிரிவு

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சுமார் 400 போராட்டக்காரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் சமீபத்தில் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஈரான் சிறைத் தண்டனை அறிவித்துள்ளது. அதன்படி, 160 பேருக்கு 5 முதல் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 80 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையும், 160 பேருக்கு 10 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஈரான் போராட்டத்தில் 300 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 40 பேர் சிறுவர்கள் எனவும் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், இந்தப் போரட்டத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து இணைய சேவையில் ஈரான் தடங்கல் ஏற்படுத்துவதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

முன்னதாக, மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இதில் 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இதனிடையே, போராட்டத்தை பரப்பிய குற்றத்திற்காகவும், பாதுகாப்பு படையினரைக் கொன்ற குற்றத்திற்காகவும் 20- க்கும் மேற்பட்டவர்களுக்கு ஈரான் அரசு மரணத் தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், கடந்த வாரம் இருவர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டனர். ஈரான் அரசின் இந்தச் செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE