இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு; 300-க்கும் மேற்பட்டோர் காயம்

By செய்திப்பிரிவு

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தோனேசியாவின் மத்திய ஜாவா தீவில் உள்ள சியான்ஜூர் என்ற பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவாகி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக 10-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இஸ்லாமிய உண்டு உரைவிட பள்ளி ஒன்றும், மருத்துவமனை ஒன்றும் சேதடைந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அதிர்வை உணர்ந்ததாகவும், இதை அடுத்து கட்டடங்களுக்குள் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியே வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

27 கோடி மக்கள் வாழும் இந்தோனேசியாவில் அதன் நிலவியல் அமைப்பு காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இதேபோல், இங்கு எரிமலை வெடிப்பும், சுனாமி பாதிப்பும்கூட நிகழ்கிறது. தலைநகர் ஜகார்த்தாவை ஒட்டிய பகுதிகளில் நிலநடுக்கம் அரிதாகவே ஏற்படும் என்றபோதிலும், இம்முறை ஜகார்த்தாவை ஒட்டிய பகுதியில்தான் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜகார்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக 25 பேர் உயிரிழந்தனர். 460-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. இதேபோல், கடந்த ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், 6,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE